வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By மாங்குடி மைனர்
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (15:19 IST)

இவற்றையெல்லாம் செய்யுமா தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும்?...

ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என்பது போல், மத்திய அரசு பதவியில் (எம்.பி) இருப்பவர்கள், மாநில அரசு பதவிக்கு (எம்.எல்.ஏ) விண்ணப்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
 

 
ஏற்கனவே ஒரு பதவியில் இருந்து கொண்டு இன்னோரு பதவிக்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? மாநில அரசு பதவி கிடைத்தால், மத்திய அரசு பதவியை உதறுவது, இல்லையென்றால், மத்திய அரசு பதவியை தக்க வைத்துக் கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல்.
 
தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுபவர்கள், இரண்டிலும் வெற்றிப் பெற்றால், ஒரு தொகுதியின் வெற்றியை மற்றும் தக்க வைத்துக் கொண்டு, மற்றொரு தொகுதியை விட்டுக் கொடுப்பதால், அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.
 
அதேப் போல் சுயலாபத்திற்காக, ஒரு தொகுதியில் வெற்றிப் பெற்ற வேட்பாளர், ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் அவசியமாகிறது. நியாயமான காரணங்களுக்காக (வெற்றிப் பெற்ற வேட்பாளர் இறந்து போனால்), நடத்தப்படும் இடைத்தேர்தலுக்கு, யாரும் பொறுப்பேற்க முடியாது.
 
ஆனால், தேவையில்லாத இடைத்தேர்தலுக்கு வழி வகுக்கும் செயலைக் கண்டிப்பது மட்டுமன்றி, தண்டிக்கவும்பட வேண்டும். நியாயமான காரணமில்லாமல் நடத்தப்படும் இடைத்தேர்தலுக்கு, அந்த இடைத்தேர்தலுக்கு காரணமாக வேட்பாளர் அல்லது அவர் சார்ந்த கட்சியிடமிருந்து, அந்த இடைத்தேர்தலுக்கு உண்டான செலவை முழுவதுமாக வசூலிப்படுவதோடு, அவரோ மற்றும் அவர் சார்ந்த கட்சியையோ, அந்த இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது.
 
மேலும், அவருக்கு பின்னாளில் அரசு சார்பாக எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படக்கூடாது. தேர்தலுக்கு முன்னர் அமைந்த கூட்டணியோ, பின்னர் அமைந்த கூட்டணியோ, அந்த கூட்டணி, ஆட்சி அமைத்தால், கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் எவ்விதமான நிபந்தனைமின்றி முழுமையாக 5 வருட காலம், ஆட்சி தொடர ஒத்துழைக்க வேண்டும்.
 
ஆட்சிக்கு உள்ளிருந்து ஆதரவோ அல்லது வெளியிலிருந்து ஆதரவோ, ஆதரவை அளித்தப் பிறகு, அந்த ஆட்சி முடியும் வரை, அந்த ஆதரவை வாபஸ் பெற அனுமதிக்கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டால், அது மக்களை ஏமாற்றும் செயல். கட்சி தாவலை, அந்த ஆட்சி முடியும் வரை, எவ்வித காரணங்களுக்காகவும், கணக்குகளுக்காகவும் (1/3 அல்லது 2/3) உட்படுத்தப்படாமல் தொடரப்பட வேண்டும்.
 
தவிர்க்க முடியாத பட்சத்தில், கட்சி தாவிய அனைவரும் தாங்கள் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட அனுமதிப்படக்கூடாது. கட்சி தாவல்கள், குதிரை பேரங்கள் மூலம் திணிக்கப்படும் தேர்தல்களால், மக்களின் வரிப் பணம் வீணாக்கப்படுவதோடு, மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
 
பூனைக்கு மணி கட்டுவது யார்? கடிவாளம் போடுமா தேர்தல் கமிஷன்? நிர்பந்திக்குமா நீதிமன்றங்கள்? விடை தெரியாத கேள்விகள்?
 
எனினும் இந்த நாட்டை பொறுத்தவரை எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களின் அஸ்திவாரம்.