வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 14 அக்டோபர் 2014 (21:26 IST)

மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம்

கேரளாவில் சிறு நீரக கோளாரால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்காமல், பேய் பிடித்ததாக கூறி மாந்திரீகம் செய்ததால், மாணவி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம், நாம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னால் இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி, மருத்துவத்துறையில் வின்னைத்தொடும் முன்னேற்றம் எல்லாம் எதற்காக என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.
 
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரிகரை பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் ஆதிரா(18). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரசன்னகுமார் குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஆதிராவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நாளுக்கு நாள் அவரது உடல் மெலிந்து வந்தது. கை கால்கள் வீங்கின. இதையடுத்து அவரை பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் காண்பித்தனர். ஆதிராவுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறினர். 
 
இதையடுத்து பிரசன்னகுமார் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் தனது மகளின் உடல்நிலை குறித்து கூறியுள்ளார். அப்போது ஆதிராவுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் உடனடியாக பூஜை நடத்தினால் நோய் குறையும் என்று அங்குள்ள சிலர் கூறினர். இதை பிரசன்னகுமார் நம்பியுள்ளார். இதையடுத்து ஆதிராவை, பிரசன்னகுமார் அப்பகுதியில் உள்ள அவரது அண்ணன் வல்சன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஆதிராவுக்கு பூஜை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆதிராவின் உடல்நிலை மேலும் மோசமானது திடீரென மயக்கமடைந்தார்.  உடனடியாக அவரை பத்தனம் திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆதிராவின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து மருத்துவர்கள் பத்தனம்திட்டா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் பிரசன்னகுமார், வல்சனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆதிராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோட்டாயம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே ஆதிரா சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் கூறினர்.
 
கட ந்த வெள்ளிக்கிழமை, தான்சானியாவில் சூனியக்காரகள் என்று கூறி 7 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மற்ற இருவர் 40 வயதுள்ளவர்கள். தான்சானியாவின் மக்கள் மந்திர தந்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள். இதனால் அங்கு வருடத்திற்கு குறைந்தது 500 பேர் எந்தவித விசாரணையுமின்றி, மோசமான சூனியக்காரர்கள் என்று கூறி கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
 
இந்தியாவில் கட ந்த 2000 முதல் 2012 வரையிலான 2 ஆண்டுகளில் சுமார் 2097 பேர் சூனியக்காரர்கள் என்று கூறி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற மூட நம்பிக்கைகளால் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்ந்து வருகிறது. 
 
இதுபோன்ற கொலைகள் மக்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறதா? மதங்களின் மூடநம்பிக்கை ஆதிக்கப் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை குறிக்கிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு மக்கள் சரியான விடைகளை அறிந்து, உணர்ந்து, அறிவுக்கும் வளர்ச்சிக்கும் உகந்த செயல்களைப் பின்பற்றினால் தான், மூடநம்பிக்கைகளால் இதுபோன்ற கொலைகள் மற்றும் சித்தரவதைகள் நடந்து வருவதைத் தடுக்க முடியும். ஒரு சிறந்த, அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய, மனித முன்னேற்றத்தை மேலும் மேலும் வளர்க்க உதவும், திட்டமிடப்பட்ட பகுத்தறிவை புகட்டும் கல்வியால் மட்டுமே இனிவரும் சந்ததிகள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.