காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

Webdunia| Last Modified சனி, 19 ஜனவரி 2008 (18:15 IST)
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
டெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.
பாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :