இரட்டை டம்ளர் முறை; தொடரும் ஜாதி வெறிகள்

Webdunia|
FILE
ஈரோடு மாவட்டத்தில் பல ஊர்களில் இன்றும் கூட டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறையை கடைபிடிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் பொறுப்பாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம், சிவகிரி, அரச்சலூர், பாரப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளது. உயர்ஜாதியினருக்கு ஸ்டீல் டம்ளரில் டீ கொடுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சென்றால் தனியாக பிளாஸ்டிக் டம்ளரில் டீ கொடுக்கிறார்கள்.
கண்ணாடி டம்ளரில் டீ கேட்டால் அந்த கிளாசை கழுவி டீ வாங்கி குடிக்க சொல்கிறார்கள். இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக கொங்கு மாவட்டங்கள் என்று கூறப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஜாதி பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. அங்கு வாழும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறி உள்ளனர். அதன் காரணமாகவே அப்பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோவில்களில் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை, இது போன்ற ஜாதிக் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஊர்களில் உள்ள கோவில்களை அரசு அற நிலையத்துறை இன்றளவும் கூட ஏற்று நடத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியே அதற்கான முயற்சிகளை யாராவது செய்தால், அவர்களை பணத்தின் மூலமாகவோ, வன்முறைச் செயல்களின் மூலமாகவோ தடுத்து நிறுத்துகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :