ஈழத் தமிழர்களுக்கு எதிரான அந்த இறுதிப் போரின் இறுதி நாளான திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த, நாசகார ஆயுதங்களை வீசி, பாதுகாப்பு வலயப் பகுதியில் விடுதலைப் புலிகளோடு இருந்த 55,000 அப்பாவி மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்ததை உலக மக்களின் கண்களில் இருந்து மறைக்கவும் இந்நாடுகள் உதவியுள்ளன. ஏனென்றால் இவர்கள் யாவரும் சிறிலங்க அரசின் கூட்டாளிகளல்லவா. அந்நாட்டு அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லா விதத்திலும் உதவியவர்களல்லவா. அப்படியிருக்கும்போது இறுதியாக நடத்தப்பட்ட மனிதப் படுகொலையிலும் உள்ள தங்களின் பங்கை மறைக்க வேண்டிய கட்டாயமும், தங்களது கூட்டாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படுவது இயற்கைதானே?
விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் தீர்வா?
இலங்கையில் சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் மற்றும் குடிசார் உரிமைகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக போராடிவரும் தங்கள் மீது முதலில் காவல் துறையைக் கொண்டும், பிறகு கால் நூற்றாண்டிற்கும் மேலாக இராணுவம் உள்ளிட்ட முப்படைகளைக் கொண்டும் இன ரீதியாக ஒடுக்கிவரும் ஒரு பயங்கரவாத அரசிடமிருந்து விடுதலைப் பெறவதே ஒரே வழி என்று முடிவு செய்த ஈழத் தமிழரின் மீது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு மேம்போக்கான, பலவீனமான அரசியல் தீர்வைத் திணித்து இனப் பிரச்சனையையே படுகொலை செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் முயற்சிக்கின்றன.
தங்களுடைய இராணுவ, பொருளாதார நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த நாடுகளுக்கு ஈழத் தமிழர்களின் நியாயம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை விட, அவர்களை கொன்று குவித்து அவர்களின் தேசியப் பிரச்சனையையே புதைக்க முற்பட்டிருக்கும் சிறிலங்க இனவாத அரசின் நட்பும் கூட்டாண்மையும் முக்கியமாகவுள்ளது.
இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக இப்படிப்பட்ட பரஸ்பர புரிதலுடன்தான் இந்த நாடுகள் தென்னாசியாவில் தங்களுடைய நட்பு வலையை பிண்ணிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் மக்களுடைய உணர்வுகள் இந்நாடுகளில் மிதிக்கப்படுகின்றன, காவல் துறைகள் அரை இராணுவ மயப்படுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடுகளும், காலனி ஆதிக்க காலத்தில் பார்த்திராத அடக்குமுறைகளும், அதற்கு துணை புரியும் சட்டங்களும் அதிகமாகி வருகின்றன.
இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா?
அய்யநாதன்|
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் என்று சிறிலங்க அரசும் அதன் தலைவர் ராஜபக்சவும் கூறியதை ‘உள்நாட்டுப் போரின்’ முடிவாக தங்கள் வசதிக்கு ஏற்றுக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட சில உலக நாடுகள், உடனடியாக தமிழர்கள் பிரச்சனைக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வை சிறிலங்க அரசு உருவாக்க வேண்டும் என்று ஏதோ தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள சிறிலங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்காகவும், அம்மக்களின் மறுவாழ்விற்காகவும் சிறிலங்க அரசிற்கு ‘எல்லா விதத்திலும்’ உதவ தாங்கள் தயார் என்றும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. ரூ.500 கோடியை அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்த ‘சிறிலங்க ஆதரவு’ நாடுகள், இப்படிப்பட்ட அறிவிப்பின் மூலம், அந்நாடு இதுவரை மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை மிக அழகாக மறைக்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனையை பயங்கரவாதத்தி்ற்கு எதிரான உள்நாட்டுப் போர் என்று கூறி, அதனை சிறிலங்க அரசு முடித்துவிட்டதை ஏதோ ஒரு பெரிய சாதனையை அந்நாட்டு இராணுவமும், அதிபரும் செய்துவிட்டதாக மனமுவந்து பாராட்டியும் உள்ளன.