1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2014 (10:22 IST)

ஹேல்ஸ் காட்டடி சதம்! இங்கிலாந்து அபார வெற்றி!

நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை இரண்டாவது போட்டியில் இலங்கையை இங்கிலாந்து தனது அபார பேட்டிங்கினால் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை விளாச தொடர்ச்சியாக ஆடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்து அணியில் அதிரடி மன்னன் அல்கெஸ் ஹேள்ஸ் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 116 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

38 பந்துகளில் அரை சதம் கண்ட ஹேல்ஸ் அடுத்த 22 பந்துகளில் மேலும் 50 ரன்களை விளாசி 60 பந்துகளில் சதம் கண்டார். இங்கிலாந்து துரத்திய அதிகபட்ச இலக்கு இதுதான்.
இங்கிலாந்துக்கு பீல்டிங்கில் மறக்கப்படவேண்டிய நாள் நேற்று, 4 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. சுலபமான ரன் அவுட் கோட்டைவிடப்பட்டது இதுதான் இலங்கையின் 189 ரன்களுக்குக் காரணம்.
 
இங்கிலாந்து துவக்க ஓவரிலேயே அதிர்ச்சியைச் சந்தித்தது. 5 மற்றும் 6வது பந்துகளில் குலசேகரா எம்.ஜே. லம்ப், அலி ஆகியோரை பெவிலியன் அனுப்பினார். இங்கிலாந்து ரன் எடுக்காமலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. 
 
அதன் பிறகு மோர்கன், ஹேல்ஸ் இணைந்து மிகவும் சாதுரியமாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3வது விக்கெட்டுக்காக 15.2 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தனர். இது ஒரு புதிய ட்20 சாதனையாகும். 

அலெக்ஸ் ஹேல்ஸிற்கு ஜெயவர்தனே 55 ரன்னில் இருந்தபோது ஒரு கேட்ச் விட்டார். முதல் ஓவரில் கலக்கிய குலசேகரா மீண்டும் 17வது ஓவரில் வந்து மோர்கன், அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோரை பெவிலியன் அனுப்பினார். இலக்கைக்கு சற்றே நம்பிக்கை வந்தது.
ஹேல்ஸ் ஆனால் ஒரு முனையில் சாத்துப்படி கொடுத்துக் கொண்டிருந்தார். ரவி பொபாரா மலிங்காவை இரண்டு பவுண்டரிகள் அடித்தது இங்கிலாந்துக்கு சாதகமானது.
 
அஜந்தாம் மெண்டிஸ் மறக்கவேண்டிய தினம் நேற்று, 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்த அவர் ஒரே ஓவரில் 25 ரன்களைக் கொடுத்ததுதான் இங்கிலாந்துக்கு துரத்தலை எளிமையாக்கியது. கடைசியில் ஹேல்ஸ் 3 சிக்சர்களுடன் வெற்றி பெறச் செய்தார். மோர்கன் 38 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 57 எடுத்தார்.
 
இலங்கை பேட்டிங்கில் ஜெயவர்தனேக்கு வாழ்வு கொடுக்கப்பட்டது, அவருக்கு 19 ரன்னில் ஒருகேட்ச், பிறகு ஒரு ரன் அவுட் வாய்ப்பு, பிறகு 80 ரன்னில் மற்றொரு கேட்ச் என்று வாய்ப்புகள் கோட்டைவிடப்பட்டன. ஃபார்மில் இல்லாத தில்ஷனுக்கு இங்கிலாந்து 55 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
 
ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.