1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Veeramani
Last Updated : வியாழன், 8 மே 2014 (14:35 IST)

மேக்ஸ்வெல்லின் அதிரடியில் மீண்டும் வீழ்ந்தது சென்னை - பஞ்சாப் அணி அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல்லின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சென்னை அணி மீண்டும் மண்ணை கவ்வியது.
7வது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு அரங்கேறிய 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் சந்தித்தன. சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. பஞ்சாப் அணியில் இரு மாற்றமாக புஜாரா, எல்.பாலாஜி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மன்தீப்சிங், முரளிகார்த்திக் சேர்க்கப்பட்டனர்.
 
டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் தோனி முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார். அது எவ்வளவு தவறான முடிவு என்பதை அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் உணர்ந்திருப்பார்.
 
பஞ்சாப்பின் இன்னிங்சை பவுண்டரியுடன் ஷேவாக் தொடங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மன்தீப்சிங் (3 ரன்) சோபிக்காவிட்டாலும், ஷேவாக் தனது பங்குக்கு 30 ரன்கள் (23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த திருப்தியுடன் பெவிலியன் திரும்பினார்.
 
இதைத் தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்லும், டேவிட் மில்லரும் கைப்பிடித்தனர். விக்கெட் சரிவை கவனத்தில் கொண்டு சில ஓவர்கள் மட்டும் பொறுமை காத்தனர். இதனால் 10 ஓவர்களில் பஞ்சாப் 2 விக்கெட்டுக்கு 69 ரன்களே எடுத்திருந்தது.
 
இதன் பின்னர் தான் களத்தில் அதிரடி திருவிழா ஆரம்பமானது. 11வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் மேக்ஸ்வெல் இரண்டு மெகா சிக்சர்களை பறக்க விட்டார். ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் அஸ்வின் பந்து வீச வந்த போது, மறுபடியும் அவரை நோகடித்த மேக்ஸ்வெல் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை போட்டு தாக்கினார். டேவிட் மில்லரும், விருந்து படைக்க தவறவில்லை.

சென்னை அணிக்கு எதிரான முதற்கட்ட லீக்கில் எப்படி இவர்கள் இருவரும் எமனாக வந்து சேர்ந்தார்களா? அது போல் தான் இப்போதும் நைய புடைத்து எடுத்தனர். இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் சென்னை பவுலர்கள் திக்கு தெரியாமல் தவித்தனர். ஆடுகளம் பவுலர்களுக்கு துளியும் உதவாததால், பந்து எல்லைக்கோட்டை நோக்கி தான் ஓடிக் கொண்டே இருந்தன. ‘ரிவர்ஸ்’ ஷாட்டிலும் அமர்க்கப்படுத்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல், வெய்ன் சுமித்தின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை ஓட விட்டார்.‘மேக்ஸ்வெல்...மேக்ஸ்வெல்’ என்ற மந்திர ஜாலம் தான் சிறிது நேரம் ஸ்டேடியம் முழுவதும் பரவியிருந்தன.
 
அணியின் ஸ்கோர் 173 ரன்களாக உயர்ந்த போது, டேவிட் மில்லர் 47 ரன்களில் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். இந்த தொடரில் 4வது முறையாக சதத்தை நெருங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் கோட்டை விட்டார். 90 ரன்கள் விளாசிய (38 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) அவர் எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். அப்போது 16 பந்துகள் எஞ்சியிருந்தன.
 
மேக்ஸ்வெல் வெளியேறினாலும், பஞ்சாப்பின் ரன்வேகம் மட்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அவர் விட்டுச்சென்ற பணியை கேப்டன் ஜார்ஜ் பெய்லி கச்சிதமாக செய்தார். ல்பனாசின் ஓவரில் 4 பவுண்டரி சாத்திய அவர், மொகித் ஷர்மாவின் கடைசி ஓவரில் 2 சிக்சருடன் இன்னிங்சை அட்டகாசமாக முடித்து வைத்தார்.
 
20 ஓவர் முடிவில் பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. ஜார்ஜ் பெய்லி 40 ரன்களுடன் (13 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில் ஓர் அணியின் 5வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
 
ஆனால் பஞ்சாப் அணிக்கு இது சிறந்த ஸ்கோர் கிடையாது. 2011-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக 232 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்சமாக நீடிக்கிறது. கடைசி 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 162 ரன்கள் சேகரித்தது. ஐபிஎல் வரலாற்றில் கடைசி 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான்.
 
அடுத்து இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெய்ன் சுமித் (4 ரன்) முதல் ஓவரிலேயே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களால் பஞ்சாப் போன்று ஜெட் வேகத்தில் ரன்களை திரட்ட இயலவில்லை. தோல்வி உறுதி என்ற மனநிலையுடன் ஆடிய சென்னை வீரர்கள் கடைசிவரை தாக்குப்பிடித்தது மட்டுமே மிச்சம். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 187 ரன்களை எடுக்க முடிந்தது.
 
இதன் மூலம் பஞ்சாப் அணி 44 ரன் வித்தியாசத்தில் 6வது வெற்றியை பதிவு செய்தது. 8வது ஆட்டத்தில் ஆடிய சென்னைக்கு இது 2வது தோல்வியாகும். முதல் தோல்வியும் இதே பஞ்சாப்புக்கு எதிராகத் நிகழ்ந்தது. அப்போதும் மேக்ஸ்வெல் தான் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.