வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 3 ஏப்ரல் 2014 (22:55 IST)

இயற்கையின் சதி! D/L முறையில் இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது! வெஸ்ட் இண்டீஸ் பரிதாப வெளியேற்றம்!

டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 161 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வருகையில் திடீரென பயங்கர ஆலங்கட்டி மழை பொழிய  13.5 ஓவர்களில் 80/4 என்ற தேங்கிப்போனது. மீண்டும் ஆட்டம் நடக்க வாய்ப்பில்லாத நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கை 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.
சாமுயெல்ஸ் 18 ரன்களுடனும் டேரன் சாமி அப்போதுதான் இறங்கி ரன் எடுக்காமலும் இருந்தனர். பொதுவாக கடைசி 5 ஓவர்களில்தான் டேரன் சாமி கூட்டணி பிளந்து கட்டி அரிய வெற்றிகளைப் பெற்றுவந்துள்ளது. ஆனால் இன்று 13.5 ஓவர்கள் முடிந்த நிலையில் திடீரென பேய்த் தனமாக ஆலங்கட்டி மழை அதாவது கால்ஃப் பந்து அளவுக்கு சைஸ் உள்ள பனிக்கட்டிகள் படு வேகமாக மைதானத்தில் விழத் தொடங்கின. 

சிறிது நேரத்தில் மைதானம் முழுதும்  வெள்ளை நிறமாக மாறிப்போனது.
 
பிரித்து மேய்ந்தது மழை மைதானம் குளம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஆட்டத்தை தொடர முடியவில்லை. இலங்கை இதே 13.5 ஓவர்களில் 93/4 என்று இருந்தது. ஆனால் விசித்திரமான, புரியாத டக்வொர்த் முறைப்படி 27 ரன்கள் முன்னிலைபெற்றிருந்தது இலங்கை.
 
 

கடந்த T20 உலக சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸின் உலகக் கோப்பையை தக்க வைக்கும் கனவை ஆலங்கட்டி மழை முறியடித்தது.
முன்னதாக 161 ரன்கள் இலக்கை முன்னிட்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், முதல் ஓவரிலேயே 17 ரன்கள் விளாசியது. வைன் ஸ்மித் குலசேகராவை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். அதன் பிறகு குலசேகரா வைடு வீச அது பவுண்டரி ஆக 5 வைடுகள் வந்தது. மிக மோசமான ஓவர்.
 
அதற்கு அடுத்த ஓவர் கேப்டன் மலிங்கா, சேனநாயகேயிடம் கொடுத்தார், அவர் 3 ரன்களயே விட்டுக் கொடுத்தார்.
 
3வது ஓவர் எதிர்பார்த்தபடி மலிங்காவே பந்து வீச வந்தார். அருமையான் ஓவர் அதில் 2 ரன்களே வந்தது. 4வது ஓவர் சேன நாயகே மீண்டும் டைட் - 3 ரன்களே வந்தது.

5வது ஓவர் மலிங்கா வந்தார் ஆட்டம் மாறிப்போனது. முதல் பந்து கெய்லுக்கு ஸ்லோயர் ஒன்னாக வீச கெய்ல் மட்டையை இறக்குவதில் மந்தம் காட்டினார். பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. கெய்ல் 13 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதே ஓவரில் அதிரடி பார்மில் இருந்த வைன் ஸ்மித் நேராக வந்த பந்தை கோட்டைவிட பந்து ஸ்டம்பைத் தாக்கியது. 17 பந்துகளில் வெளியேறினார். சாமுயேல்ஸ், சிம்மன்ஸ் கிரீஸில் வர இலங்கை கிடுக்கிப்பிடி போட்டது. 6வது ஓவர் குல சேகரா 2 ரன்கள்.
 
நியூசீ. போட்டியின் நாயகன் ஹெராத் வந்தார். 4 ரன்கள். அடுத்த 8வது ஓவரில் பிரசன்னா சிம்மன்ஸை எல்.பி.செய்தார் அந்த பந்து உள்ளே வந்தது கட் செய்ய முயன்று தோல்வியடைந்தார்.
 
அதன் பிறகு 10வது ஓவரில் ஹெராத்தை வைன் பிராவோ பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது. முதல் ஓவரில் 17 ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் சில சீரான பந்து வீச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு 10வது ஓவர் முடிவில் 53/3 என்று இருந்தது. 10 ஓவர்களில் 108 ரன்கள் தேவை.
 

13வது ஓவரில் ஹெராத் பந்தை பிராவோ இன்சைட் அவுட் சென்று கவர் திசையில் சிக்ஸ் அடித்தார். முன்னதகா சாமுயேல்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 11 ரன்கள் 13வது ஓவர் முடிவில் 76/3. 42 பந்துகள் தேவை 85 ரன்கள். குலசேகரா 14வது ஓவரில் வர 30 ரன்கள் எடுத்து அபாயகரமாக இருந்த பிராவோ டீப் ஸ்கொயர்லெக்கில் நேராக ஜெயவர்தனேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசியாக 13.5 ஓவர் இருந்தபோதுதான் ஆலங்கட்டி மழை வந்தது.
மழை பற்றி ஏற்கனவே தெரிந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னதாகவே அடித்து ஆடியிருக்கவேண்டும்,  கெய்ல் வேறு அறுத்து விட்டுப் போய்விட்டார். கடைசி 5 ஓவரில்தான் காட்டடி தர்பார் நிகழும். ஆனால் இன்று இயற்கை பழி வாஙிவிட்டது.
 
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை சரியாக பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் 3 ஓவர்களில் 32 ரன்களை விளாசிய இலங்கை அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை சீராக இழந்தது. சங்கக்காராவும் சோபிக்காமல் பத்ரீயின் அபார பிளை டெலிவரிக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இலங்கை 7 ஓவர்களில் 50/3 என்று ஆனது. தில்ஷான் அபாரமாக நின்று ஆடினார். அவர் 39 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து 14வது ஓவரில் ரன் அவுட் ஆனார். 14வது ஓவர் முடிவில் 94/4 என்று இருந்தது இலங்கை.

அதன் பிறகு மேத்யூஸ் களமிறங்கி காட்டுக் காட்டினார். கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் வந்தது. குறிப்பாக 19வது ஓவரி சன்டோகி வீச புல்டாஸ் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார். அடுத்த பந்து அதே திசையில் பவுண்டரி. அடுத்த பந்து ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 17 ரன்கள்.
கடைசி ஓவரில் ஒன்று வைன் பிராவோ வீசியிருக்கவேண்டும் அல்லது சாமியே வீசியிருக்கவேண்டும் அதை விடுத்து ரசல் ஆர்னால்டிடம் பந்தை கொடுக்க முதல் 3 பந்துகள் நன்றாக வீசி 3 ரன்களையே கொடுத்தார். ஆனால் திடீரெஅன் அசிங்கமாக 2 வைடுகளை வீசினார். அடுத்த பந்தை மேத்யூஸ் கவர் டிரைவில் சிக்ஸ். அடுத்த பந்து ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி 15 ரன்கள். இந்த கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள்தான் வெஸ்ட் இண்டீஸை கவிழ்த்தது. இதில் 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தால் டக்வொர்த் மே.இ.தீவுகளுக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
 
இயற்கையின் சதி!! இலங்கை இறுதிக்குள் நுழைந்தது.