வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2014 (10:48 IST)

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா! இங்கிலாந்து பரிதாப வெளியேற்றம்!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பரிதாப தோல்வி தழுவியது. தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து வெளியேறியது. டிவிலியர்ஸின் அதிரடி அரைசதம் இங்கிலாந்தை பதம் பார்த்தது .
அதிகபட்ச இலக்குகளை துரத்துவதில் இங்கிலாந்து இப்போது T20-யில் அபாய அணியாக உள்ளது. அன்று 189 ரன்களை இலங்கைக்கு எதிராக துரத்தியது. நேற்று தென் ஆப்பிரிக்காவின் 196 ரன்களைத் துரத்தி 193 ரன்களை எடுத்து தோல்வி தழுவியது. முதல் போட்டியில் மழை காரணமாக அதிகபட்ச ஸ்கோரை இங்கிலாந்து எடுத்தும் நியூசீலாந்து 5 ஓவர்களில் எடுத்த ஸ்கோரின் மூலம் டக் வொர்த் லூயிஸ் முறையில் வென்றது.
 
ஆக, இங்கிலாந்து உண்மையில் ஒரு அபாயகரமான அணிதான். ஆனால் துரதிர்ஷ்டம் துரத்துகிறது அந்த அணியை.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டனான ஏ.பி.டிவிலியர்ஸ் அதிரடி அரை சதம் எடுத்து தென் ஆப்பிரிக்காவின் புதிய T20 சாதனை படைத்தார். டு பிளேசிக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டதால் கேப்டன்சி எடுத்துக் கொண்ட டிவிலியர்ஸ், 28 பந்துகளில் 69 நாட் அவுட் என்று விளாசியதோடு இந்தத் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா எடுக்க துணை புரிந்தார்.
10வது ஓவர் முதல் 15வது ஓவர் வரை சற்றே மோசமாகச் சென்று கொண்டிருந்த ஸ்கோர் விகிதம் டிவிலியர்ஸின் அதிரடியினால் கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களாக அதிகரித்தது. ஆஃப் திசயில் நகர்ந்து கொண்டு லெக் திசையில் விளாசி எடுத்தார் டிவிலியர்ஸ், இன்றைய தினத்தில் இவர் அளவுக்கு விதம் விதமான ஷாட்களை ஆடும் வீரர் இல்லை என்றே கூறிவிடலாம்.
 
இலக்கை இங்கிலாந்து துரத்தியபோது இலங்கைக்கு எதிராக கொலைகார மூடில் இருந்த ஹேல்ஸ் நேற்றும் அதே மூடில் இருந்தார். 22 பந்துகளில் 38 ரன்களைச் சாத்தி எடுத்தார். கடைசியில் டீப் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இயன் மோர்கனும் இம்ரான் தாகிர் பந்தை கட் செய்ய முயன்று அவுட் ஆனார்.
 
அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிக்ஸ் ஓவரில் 17 ரன்கள் விளாசினார். நேராக அதில் ஒரு சிக்சர். ஆனால் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் நேராக ஆல்பி மோர்கெல் கையில் போய் உட்கார்ந்தது. 
 
மீண்டும் இது ஏதோ லெக்ஸ்பின்னர்களின் உலகக் கோப்பை போல அமித் மிஸ்ராவைத் தொடர்ந்து இம்ரான் தாஹிர் நேற்று ஈரமான பந்தில் உண்மையில் அற்புதமாஅக வீசினார் 27 ரன்களுக்கு அந்த சமயத்தில் அவர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்தது. 

துரத்தல் முழுதும் தென் ஆப்பிரிக்கா அந்த குறிப்பிட்ட ஓவரில் எவ்வளவு ரன் விகிதம் வைத்திருந்ததோ அதிஐவிட இங்கிலாந்து அதிகமே வைத்திருந்தது. ஆனால் ஃபினிஷ் செய்ய ஆளில்லை. ஒரு  டேரன் சாமி, தோனி, டிவிலியர்ஸ் என்று ஆட்கள் இருந்திருந்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று சங்குதான்.
 
இந்த உலகக் கோப்பை போட்டிகளை ஈரப்பந்து போட்டிகள் என்று வர்ணித்துவிடலாம். எப்போதும் பவுலர்கள், பீல்டர்கள் பந்துகளை பிழிந்துப் பிழிந்து, துடைத்து துடைத்து நேரம் ஆகிறது. இதில் நேரம் ஆகிறது என்று கேப்டனௌக்கு தடை விதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
 
இங்கிலாந்தின் விதியும் நேற்று ஈரப்பந்தினால்தான் காலியானது. அதற்குப் பலியானவர் ஜேட் டேர்ன்பாக். இவர் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில்தான் டிவிலியர்ஸ் சாத்த 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
 
தென் ஆப்பிரிக்காவில் அதே போல் ஆம்லா அபாரமாக ஆடினார். அவரின் முதல் T20 அரை சதமாகும் இது 37 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசினார் அவர்.
 
ஆட்ட நாயகனாக டிவிலியர்ஸ் தேர்வு.