வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (23:17 IST)

யுவ்ராஜ் சிங்கின் படு மோசமான பேட்டிங்கினால் இந்தியா தோல்வி! இலங்கை T20 உலக சாம்பியன்!

வங்கதேசத்தில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் ஒரு நபர் ஒரே நபர் ஒரு அணியின் வாய்ப்புகளைக் காலி செய்ய முடியும் என்றால் அது யுவ்ராஜ் சிங்தான்! 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து தடவலோ தடவல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு தோல்வியை ஏற்படுத்தினார்.
குமார் சங்கக்கார இன்றுடன் T20 உலகக் கோப்பையிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் இந்தச் சிறிய இலக்கை விட்டு விடுவாரா என்ன? 35 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 52 நாட் அவுட். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
 
இந்தியா கடைசி 4 ஓவர்களில் பவுண்டரிகளே அடிக்க முடியவில்லை. குறிப்பாக 16வது ஓவரிலேயே 70 ரன்களை கடந்த விராட் கோலிக்கு விளையாட கடைசி 5 ஓவர்களில் 7 பந்துகளே கிடைத்தன. தோனிக்கும் ஒன்றும் பெயரவில்லை. யுவ்ராஜ் சிங்கைத் தவிர இந்திய தோல்விக்கு வேறு காரணங்களை யோசிக்க முடியவில்லை.
 

இந்திய இன்னிங்ஸில் ஒரு நேரத்தில் கூட ரன் விகிதம் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டது இலங்கை, மலிங்கா நன்றாகவே கேப்டன்சி செய்தார். அவரது தனிப்பட்ட பந்து வீச்சும் அபாரம்.
துவக்கத்தில் ரஹானே மேத்யூஸ் பந்தில் 3 ரன்னில் பவுல்டு ஆனார். அப்போது இந்தியா 5/1 என்று இருந்தது. அதன் பிறகு ரோகித் சர்மா, கோலி இணைந்தனர். ரோகித் அற்புதமாக ஆடினார். சேனநாயகேவை ஸ்கொயர்லெக்கில் ரோகித் பவுண்டரி அடித்து துவங்கினார்.

7வது ஓவரில் ரங்கன்னா ஹெராத் வீச பந்து ஷாட் பிட்ச் கோலி புல் ஆடினார். மிட்விக்கெட்டில் மலிங்கா அதனை பிடிக்க எம்பினார் கையில் பட்டு பின்னால் சென்றது கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அப்போது கோலி 11 ரன்கள். மலிங்கா கோட்டைவிட்டது கோப்பையைத்தான் என்றே நினைத்தோம். ஆனால் யுவ்ராஜ் சிங் இலங்கைக்கு ஆடுவார் என்று யார் எதிர்பார்த்திருப்ப்பார்கள்
ரன் விகிதம் கட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 10வது ஓவரை மேத்யூஸ் வீச பாயிண்டில் பவுண்டரி அடித்தார் ரோகித் பிறகு சிங்கிள், கோலி வந்தார் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சர் விளாசினார். 10 ஓவர்களில் 64/1 இந்தியா.
 
26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ரோகித் ஹெராத் பந்தை ஷாட் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலியும், ரோகித்தும் 2வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர் ஆனால் அதற்கு 54 பந்துகளை எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லை பந்துகள் பேட்டிற்கு வேகமாக வரவில்லை.
 
அதன் பிறகுதான் யுவ்ராஜ்சிங்கின் திருவிளையாடல் தொடங்கியது. பிறகு கோலி மயம்தான், முதலில் சேனநாயகேவை ஒரு பவுண்டரி, அடுத்து ஹெராத்தை ஃபிளாட்டாக நேர் சிக்ஸ்.

13 ஓவர் முடிவில் இந்தியா 83/2. 14வது ஓவர் மலிங்கா வந்தார். கோலி கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஸ்கோர் 14வது ஓவரில் 93/2. அடுத்த ஓவரில்தான் யுவ்ராஜ் நடனமாட தொடங்கினார். சேனநாயகே வீச 4 பந்துகளை சாப்பிட்டார். அந்த ஓவரில் 2 ரன்கள்தான். இந்தியா 15 ஓவர் 95/2.
16வது ஓவர் கோலி இலங்கையிடமிருந்து ஆட்டத்தை இந்தியா பக்கம் நகர்த்தினார். குல சேகரா வீச லாங் ஆனில் சிக்ஸ், பிறகு கவர் திசையில் ஒரு மாட்டடி கவர் டிரைவ் பவுண்டரி, மீண்டும் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி. அந்த ஓவரில் 16 ரன்கள். வீரத் கோலி 50 பந்துகளில் 70 ரன்கள். 5 பவ்ண்டரி 4 சிக்சர்.

அதன் பிறகு யுவ்ராஜ் சிங் ஸ்ட்ரைக்கும் கொடுக்கவில்லை அவரும் அடிக்கவில்லை. இதனால் 7 பந்துகளையே கோலி சந்திக்க முடிந்தது. அவர் 77 நாட் அவுட். யுவ்ராஜ் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து மலிங்கா வீசிய புல்டாசில் கேவலமாக அவுட் ஆனார். ஷாட்டில் பவரே இல்லை. அந்தப் பந்தை எங்கு வேண்டுமானாலும் மைதானத்திற்கு வெளியே அடித்திருக்கலாம் ஆனால் அவுட் ஆனார் அவர்.
அதன் பிறகு தோனி இறங்கினார். அவராலும் ஒன்றும் முடியவில்ல்லை 7 பந்துகளில் 4 ரன்கள். கோலி 77 ரன் அவுட் ஆனார். இலங்கையில் அனைவருமே நன்றாக வீசினர். ஆனால் சேனநாயகேவை வெளுத்திருக்கவேண்டும் ஹெராத்தை வெளுத்திருக்கவேண்டும் ஆனால் யுவ்ராஜ் சிங் சாயத்தை அவர்கள் வெளுத்தனர்.  இந்தியா 130/4.
 
ஒருநேரத்தில் இந்தியா 95/2 என்று இருந்தது இந்தியா, அதே ஓவரில் இலங்கை 97/4 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு இலங்கை பந்து வீச்சு அற்புதம், யுவ்ராஜிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். மாறாக சங்கக்காரா அங்கு நின்று வெற்றி பெற்றார்.
 
சேனநாயகே என்ற அந்த ஆஃப் ஸ்பின்னர் பந்தை அதிகம் எதிர்கொண்டவர் யுவ்ராஜ், அவரால் ஒன்றுமே ஆட முடியவில்லை. பயங்கர தடவல் ஒன்று அடிக்க வேண்டும், அல்லது அவுட் ஆகவேண்டும், அல்லது சிங்கிளாவது எடுக்கவேண்டும். ஒன்றுமே செய்ய முடியாமல் யுவ்ராஜ் நடுவில் நின்று கொண்டு படுத்தி எடுத்து விட்டார். கோலி எதிர்முனையில் தனது கடுப்பை காண்பிக்கத் தொடங்கினார். 2011 உலகக் கோப்பை ஹீரோ இப்போது ஜீரோ.

இலக்கைத் துரத்திய போது இலங்கை துவக்க வீரர் குஷல் பெரேராவுக்கு இலக்கு 130 என்று தெரியாது போலும் இந்தியா நிச்சயம் 180 அடித்திருக்கும் என்ற நினைப்பில் சுத்து சுத்தென்று சுத்தி கடைசியில் 5 ரன்னில் மோகித் சர்மாவிடம் அவுட் ஆனார்.
தில்ஷான் 18 ரன்கள் எடுத்து அஸ்வினின் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து கோலியின் பவுண்டரி அருகே அபார கேட்சிற்கு வெளியேறினார். அடுத்த 4 ஓவர்கள் டைட் செய்தனர் இந்தியா ஸ்கோர் 65 ஆனபோது ஜயவர்தனே 24 ரன்களில் ரெய்னா பந்தை லெக் திசையில் அடிக்க ஷாட் மிட்விக்க்ட்டில் அஸ்வின் டைவ் அடித்துப் பிடித்தார். இடையே மிஸ்ரா நல்ல ஓவரை வீசினார். ஜடேஜா ஒரே ஓவர் 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதில் சங்கா ஒரு சிக்ஸரை விளாசினார். திரிமன்ன கடும் நெருக்கடியில் விளையாடி கடைசியில் 7 ரன்களில் மிஸ்ராவின் பந்தில் அன்டர் எட்ஜ் எடுக்க தோனி கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். இலங்கை 12.3 ஓவர்களில் 78/3. 
 
அதன் பிறகு மேத்யூஸ் இறங்காமல் மலிங்கா திசரா பெரேராவை இறக்கினார். சில டைட் ஓவர்களுக்குப் பிறகு இலங்கையின் வெற்றி இலக்கு ரன் விகிதம் ஓவருக்கு 7.38 என்று ஆனது இன்னும் இரண்டு விக்கெட்டுகள் அப்போது போயிருந்தால் தோற்றிருக்கக்கூடும், ஆனால் மிஸ்ரா பந்தை மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கிய பெரேரா 3 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 23 எடுக்க கடைசியில் சங்கா முடித்து வைத்தார்.
 
இதுவரை 8 இறுதிப்போட்டிகளில் நுழைந்துள்ள இலங்கை இன்று 2வது வெற்றியைப் பெற்றது. குறிப்பாக T20 உலகக்கோப்பையை எந்த அணியும் இதுவரை இருமுறை வென்றதில்லை இலங்கையும் முதல் முதலாக T20 சாம்பியன் பட்டம் வென்றது.
 
தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற முறையில் இவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்