வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (04:12 IST)

லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி - 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டு புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 339 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 154 பந்துகளில் சதம் [17 பவுண்டர்கள் உட்பட] அடித்தார்.
 
இதன்மூலம், கடந்த 82 ஆண்டுகளில் அதிக வயதில் டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் அடைந்தார்.
 
முன்னதாக, கடந்த 1934ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் Patsy Hendren தனது 45 வயதில் சதம் அடித்தார். அவரை தொடர்ந்து 82 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ்பா தனது 42 வயதில் டெஸ்ட் சதம் அடித்திருந்தார்.
 
இறுதியில், மிஸ்பா 114 ரன்களில் [18 பவுண்டர்கள்] வெளியேறினார். ஆசத் ஷஃபிக் 73 [12 பவுண்டர்கள்] ரன்களும், முஹமது ஹபீஸ் 40 [8 பவுண்டர்கள்] ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்கர்ஸ் 6 விக்கெட்டுகளையும், பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் அலைஸ்டர் குக் 81 ரன்களும் [12 பவுண்டர்கள்] ரன்களும், ஜோ ரூட் 48 ரன்களும் எடுத்தனர்.
 
அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
67 ரன்கள் முன்னிலைப் பெற்ற பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஆசத் ஷஃபிக் 49 ரன்களும், சர்ஃப்ராஸ் அஹ்மது 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்கர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதனால், இங்கிலாந்து அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ஜானி பைர்ஸ்டோ 48 ரன்களும், கேரி பேலன்ஸ் 43 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
 
47 ரன்களுக்குள் அலைஸ்டர் குக், ஜோ ரூட், ஹேல்ஸ் ஆகிய முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.
 
யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்து உள்ளார். இதுவே இவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாகும். அதேபோல், லார்ட்ஸ் மைதானத்தில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 
இதனால், இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாஷிர் ஷா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.