1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2015 (15:21 IST)

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து; 38 ரன்களில் ஜிம்பாப்வே தோல்வி

ஜிம்பாப்வேவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 38 வெற்றிப் பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
 

 
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கனே வில்லியம்சன் அதிகபட்சமாக 90 [109 பந்துகள், 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] ரன்கள் குவித்தார்.
 
தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 42 [50 பந்துகள், 6 பவுண்டரிகள்] எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் கிரேமே கிரீமர் 3 விக்கெட்டுகளையும், ஜான் நியும்ப்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மசகட்ஸா 57, சிபாபா 32 , எர்வின் 32 ரன்களையும் எடுத்து ஓரளவு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். கேப்டன் சிகும்பரா 3 ரன்களில் வெளியேறினாலும், சீன் வில்லயம்ஸ் 63 ரன்கள் குவித்தார்.
 
ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 33 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஜிம்பாப்வே வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், பின்னர் வந்த வீரர்களில் கிரேமே கிரீமர் (14) தவிர அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
 
இதனால், ஜிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 235 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில், நியூசிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் மெக்லெனகன் 3 விக்கெட்டுகளையும், இஸ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதன் மூலம், நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் கனே வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது.