வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2016 (10:31 IST)

இங்கிலாந்தின் கனவை சிதைத்த வெஸ்ட் இண்டீஸ்; 2ஆவது முறை கோப்பையை கைப்பற்றி சாதனை

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 28 ரன்களுக்குள் ராய் (0), ஹேல்ஸ் (1), கேப்டன் மோர்கன் (5) என அடுத்தடுத்து போட்டியிட்டனர். பின்னர் இணைந்த ஜோ ரூட், பட்லர் இணை அணியின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது. இந்த இணை 4ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
 
பின்னர் பட்லர் 36 ரன்களில் வெளியேறினார். ஸ்டோக்ஸ் (13), மொய்ன் அலி (0) என வெளியேறினர். அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோ ரூட் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
கெய்ல் ஏமாற்றம்:
 
பின்னர், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆரம்பம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. இரண்டாவது ஒவரின் முதல் பந்திலேயே, சார்லஸ் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
 
பின்னர் கெய்ல் பேட்டிங் முனைக்கு வந்தார். சந்தித்த முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை அடித்தவர், அடுத்த பந்திலேயே அவுட் ஆகி ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றினார்.
 
அடுத்து அரையிறுதியில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சிம்மன்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக 11 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
நிலைத்து நின்ற சாமுவேல்ஸ்:
 
இதனையடுத்து சாமூவேல்ஸும், வெய்ன் பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டுமாக சேர்த்தனர். அவ்வப்போது பவுண்டரிக்கும் விரட்டி நிதானமாக ரன் சேர்த்தனர். இவர்கள் கவனம் முழுவதும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வதாகவே அமைந்தது.
 
ஆனாலும் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. 14ஆவது ஓவரில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் முதல் சிக்ஸர் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிராவோ 25 ரன்களில் வெளியேறினார். இருவரும் இணைந்து 69 பந்துகளுக்கு 75 ரன்கள் எடுத்தனர்.
 
அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 36 பந்துகளில் 70 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இறங்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரஸ்ஸல் (1), கேப்டன் சமி (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார். 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
கனவை சிதைத்த பிராத்வெய்ட்:
 
அந்த நிலையில் இங்கிலாந்து வெற்றி சதவீதம் 76ஆகவும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி சதவீதம் 24ஆகவும் இருந்தது. பிராத்வைட் இறங்கினார். கடைசி மூன்று ஓவர்களுக்கு 38 ரன்கள் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி வாய்ப்பு மங்கலாகவே காணப்பட்டது.
 
18ஆவது ஓவரில் 11 ரன்களும், 19ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் முனையில் பிராத்வெய்ட் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி உறுதி என்று நம்பிய வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசி ஒரே நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நாயகன் ஆனார்.
 
இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. ஆட்டநாயகன் விருது மார்லன் சாமுவேல்ஸுக்கு வழங்கப்பட்டது. தொடர்நாயகன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.