வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (15:42 IST)

ஷேவாக் சிக்ஸர், பவுண்டரிகளில் அதிரடி சாதனை; கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளினார்

ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்த வீரர்களில் வீரேந்திர ஷேவாக், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 
நடைபெற்றுவரும் 8ஆவது ஐபிஎல் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார். அவர் புதன் கிழமை டெல்லி டேர் டேவில்ஸ் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்றப் போட்டியில் 41 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
 

 
இதன் மூலம் அதிக தடவை எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டியவர் என்ற சாதனையை ஷேவாக் பெற்றார். ஷேவாக் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடி 332 பவுண்டரிகளும், 106 சிக்சர்களும் அடித்துள்ளார். மொத்தம் 438 முறை பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே பந்தை விரட்டியுள்ளார். 
 
இதற்கு முன்னர் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டியவர் என்ற சாதனையை பெற்றிருந்தார்.
 
கிறிஸ் கெய்ல் இதுவரை 70 ஆட்டத்தில் விளையாடி 232 பவுண்டரிகளும், 200 சிக்சர்களும் விளாசியுள்ளார். ஆக மொத்தம் 432 முறை பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே அடித்திருந்தார். அந்த சாதனையை இந்திய வீரர் ஷேவாக் தற்போது முறியடித்துள்ளார்.
 
மேலும், ஷேவாக் அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளையும் சேர்த்து 4000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம், உலக அளவில் 20 ஓவர் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 25ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
இந்திய வீரர்களில் 7ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், விராட் கோலி, மகேந்திர சிங் டோனி, ராபின் உத்தப்பா ஆகியோர் 4 ஆயிரம் ரன்னை கடந்து உள்ளனர்.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் சைட் வைத்திருப்பவரும் ஷேவாக் தான். 99 ஆட்டங்களில் விளையாடி 2712 ரன்களை குவித்துள்ளார். சராசரி ரன் விகிதம் 28.85 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரைட் 156.58 என்பது குறிப்பிடத்தக்கது.