வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (18:22 IST)

’விராட் கோலி கம்ப்யூட்டர் போல செயல்படுகிறார்’ - சுனில் கவாஸ்கர்

விராட் கோலியின் மனநிலை ஒரு கணினி போல செயல்படுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

 
இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கிரிக்கெட் பல மகத்தான சாதனைகளை தொடர்ந்து புரிந்த வண்ணம் உள்ளார். தவிர, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஆளுமை செலுத்தும் ஒரு அபாயகராமான வீரராக விராட் கோலி திகழ்கிறார்.
 
நேற்று முன்தினம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 154 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
 
இந்த சதம் அவருடைய 26ஆவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் [49], ரிக்கி பாண்டிங் [30], சானத் ஜெயசூர்யா [28] ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
 
தவிர, குறைந்த இன்னிங்ஸில் 26 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை விளாசியவர்களில் முதல் இடத்தில் உள்ளார். 166 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
 
விராட் கோலி, இதுவரை அணியின் வெற்றிக்கு காரணமான சதமாக 22 சதங்களை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் [33], ரிக்கி பாண்டிங் [25], சானத் ஜெயசூர்யா [24] ஆகியோர் வெற்றிச் சதங்களை பதிவு செய்துள்ளனர்.
 
அதுபோல டெஸ்ட் போட்டியிலும் பல அரிதான சாதனைகளை இளம் வயதிலேயே படைத்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளை வென்றெடுத்த அணித் தலைவர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
 
மகேந்திர சிங் தோனி 27 வெற்றிகள் [60 போட்டிகள்] பெற்று முதலிடத்திலும், சவுரவ் கங்குலி 21 வெற்றிகள் [49 போட்டிகள்] பெற்று 2வது இடத்திலும், முஹமது அசாருதீன் 14 வெற்றிகள் [47 போட்டிகள்] பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.
 
விராட் கோலி [16], டைகர் பட்டோடி [40], சுனில் கவாஸ்கர் [47] ஆகியோர் தலா 9 வெற்றிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

கம்ப்யூட்டர் மனநிலை:
 
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ஏகமனதாக கோலியை புகழ்ந்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ‘‘விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அழகாக இருந்தது. எந்த வித முரட்டுத்தனமான ஷாட்டுகளும் அடிக்காமல், நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்டுக்கள் மூலம் ரன்கள் குவித்ததை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 
ஒன்றிரண்டு ஷாட்டுக்கள் தூக்கி அடித்திருக்கலாம், ஆனாலும், அவரது கடின உழைப்பை எந்த வல்லுனர்களும் குறை கூறமாட்டார்கள். கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் செயல்படுகிறது. அதனால்தான், களத்தில் பீல்டர் எங்கு இல்லையோ அங்கே பார்த்து அடித்து ஆடுகிறார்” என்று கூறியுள்ளார்.