செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 25 ஜூன் 2015 (19:22 IST)

’வங்கதேசத்திடம் தோற்றதற்கு குழப்பமான முடிவுகளே காரணம்’ - விராட் கோலி

வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு முடிவெடுப்பதில் இருந்த குழப்பமே காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணியை தோல்வியடைந்தது.
 

 
இந்நிலையில், புதன்கிழமை [24-06-15] நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. ஆனாலும், தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் பறிகொடுத்தது.
 
வங்கதேசத்துடனான தொடரை இழந்ததினால் கேப்டன் தோனியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்கள் வந்தன. இதனால், தான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, சாதாரண வீரராக விளையாடவும் தயார் என்று தோனி காட்டமாக கூறியிருந்தார்.
 
ஆனாலும், இந்திய வீரர்கள் அஸ்வின், சுரேஷ் ரெய்னா போன்றோர் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது துணைக் கேப்டன் விராட் கோலி வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு முடிவெடுப்பதில் இருந்த குழப்பமே காரணம் என்று குற்றம்சாட்டி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இது குறித்து விராட் கோலி கூறுகையில், “வங்காளதேச அணியினர் உண்மையிலேயே சிறந்த, நேர்மையான கிரிக்கெட்டை விளையாடினர். எங்களுக்கு முடிவு எடுப்பதில் இருந்த திண்டாட்டம் களத்திலேயே தெளிவாக தெரிந்தது” என்று 3ஆவது ஆட்டத்திற்கு முன்னதாக கூறியதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடத்தில் பேசிய விராட் கோலி, “நான் சொல்ல வந்தது, அவர்கள் ஆடிய சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் நாம் தோல்வி அடைந்தபோது, தெளிவான மனநிலையுடன் எங்களுடையய நிலையை வெளிப்படுத்த முடியவில்லை” என்றார்.