இந்தியா அபார வெற்றி; விராட் கோலி சாதனை


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 22 அக்டோபர் 2015 (21:27 IST)
விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்துள்ளது.
 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
விராட் கோலி அபாரம்:
 
 
இதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 21 [4 பவுண்டரிகள்] ரன்கள், ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, ரஹானே இணை தென் ஆப்பிரிக்கா தாக்குதலை திறமையாக எதிர்கொண்டனர்.
 
பின்னர் விராட் கோலி அரைச் சதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ரஹானே 52 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்தது.
 
அடுத்து கோலியுடன் ரெய்னா இணைந்தார். அபாரமாக ஆடிய விராட் கோலி 112 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார். இதனைத் தொடர்ந்து ரெய்னாவும் தனது அரைச்சதத்தைக் கடந்தார்.
 
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஸ்டெய்ன் பிரித்தார். ரெய்னா 53 ரன்கள் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய அணி 44.5 ஓவர்களில் 266 ரன்கள் குவித்திருந்தது.
 
இதனால் இந்திய அணி 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தோனி களமிறங்கிய வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
பின்னர், ஹர்பஜன் சிங் (0), தோனி (15) என அடுத்தடுத்து 500 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, ஸ்டெய்ன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
டி வில்லியர்ஸ் மிரட்டல்:
 
பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் களமிறங்கினார். தொடக்க வீரர் ஹசிம் அம்லா 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி கார் 43 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சுழலில் அவுட்டானார்.
 

 
பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸி [17], டேவிட் மில்லர் [6], பெஹார்டியன் [22], கிறிஸ் மோரிஸ் [9] என அடுத்தடுத்து வெளியேற தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 185 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
ஆனால், நங்கூரம் போல் நிலைத்து நின்ற டி வில்லியர்ஸ் சதமடிக்க இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், பிறகு சிறிது நேரத்திலேயே டி வில்லியர்ஸ் புவனேஷ்குமார் பந்தில் விக்கெட்டை இழக்க மைதானம் அதிர்ந்தது.
 
பின்னர், பாங்கிசோ [20], ஸ்டெய்ன் [6] என அடுத்தடுத்து வெளியேற 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 264 ரன்கள் எடுத்தது. ரபாடா 8 ரன்களிலும், இம்ரான் தாஹிர் 4 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
 
இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
 
இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. 5ஆவது மற்றும் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :