1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:16 IST)

யாருக்காக நடத்தப்படுகிறது தமிழ்நாடு பிரிமியர் லீக்?

அதிகாரமும் பணமும் ஒண்ணு சேர்ந்தா என்ன வேணாலும் செய்ய முடியும் என்பதற்கு மற்றுமொரு நிகழ்வுதான் இன்று தொடங்கும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி.
 

 
மற்ற விளையாட்டுகளில் சிறப்பிக்கும் தமிழக வீரர்கள் உலகளவில் சாதனைகள் புரிந்தபோது பெட்டி செய்திகூட வெளியிடாத ஊடகங்கள் இப்போது பக்கம் பக்கமாய் எழுதுகிறது, கூவுகிறது. சாந்திக்களையும், உஷாக்களையும் சந்தி சிரிக்கவைத்தவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?
 
பத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன வீரர்களின் தலைமையில் எட்டு அணிகள், வெளிநாட்டு பயிற்சியாளர்கள், உள்நாட்டு ஊழல் முதலைகள், தமிழ்நாட்டு திரைப்பிரபலங்கள், சர்வதேச அளவில் கொள்ளையடித்து துரத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைகள், தில்லாலங்கடி வேலை செய்து சந்தி சிரித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரர்கள் என எல்லா ஜகதால கில்லாடிகளும் சென்னையில் டேரா போட்டு, தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்க ஏற்கனவே போட்ட பூஜைக்கு இன்று செயல் வடிவம் தருகிறார்கள், சர்வதேச மீடியா உதவியுடன்.
 
இது எவ்ளோ நல்ல விசயம் என நினைப்போர்கள் இதுவரை நடைமுறையில் இருக்கும் ODI, T20, IPL, KPL, PKL என்று இன்னும் இருக்கும் ஏராள லீக் விளையாட்டுகளை பற்றி விசாரியுங்கள். யார் லாபமடைந்தார்கள் யார் ஏமாற்றப்பட்டார்கள் என்று தெரியும். விளையாடுபவர்கள் வெறும் சூது பொருளே. வியாபாரத்துடன் தான்  வீரு நடைபோடுகிறது விளையாட்டுத்துறை என்பதற்கு இதுபோன்ற போட்டிகளே சான்றுகள்.
 

 
ரியோ ஒலிம்பிக்கில் ஓடிய ஜெய்ஷாக்கு தண்ணீர் தரவில்லை. பிரேசிலுக்குப் போனது 117 வீரர்கள். வந்தது 2 பதக்கம் தான். ரியோக்கு அனுப்பின இந்திய மருத்துவக்குழு போலிகள், என  இன்னும் இன்னும் ஏகப்பட்ட அவமானங்களை மகுடமாய் சூட்டியிருக்கும் இந்திய விளையாட்டு ஆணையம், பொது மக்களுக்கு எந்த விளக்கமும் தரவில்லை.
 
யாரையும் விசாரித்து முடிக்கவில்லை. அதற்குள் கோலகாலமாய் ஒரு கிரிக்கெட் கொண்டாட்டம் நடக்கிறது. இது தோல்வியிலும், சதியிலும் துவண்டு கிடக்கும் வீரர்கள், வீராங்கனைகளை எவ்வளவு சிதைக்கும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் யோசித்திருந்தால் இன்று ஒரு கொண்டாட்டம் நடக்க அனுமதி அளித்திருக்குமா?
 
அவங்க அனுமதி அளிக்கவில்லையென்றாலும் இவர்கள் நடத்துவார்கள். ஏனென்றால் இந்திய அரசின் விளையாட்டு ஆணையத்தின் எந்த வரையறைக்குள்ளும், இந்தியா பெயரில் வலம் வரும் கிரிக்கெட் வாரியம் வராது. இந்திய அரசிற்கு பிசிசிஐ அடங்கவும் அடங்காது.
 
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருடி காமன்வெல்த் எனும் ஊழல் விளையாட்டு நடத்தி அவமானப்பட்ட அரசாங்கத்தால் எப்படி கேள்விகேட்க முடியும்? யாரும் யாருக்கு சளைத்தவர்களல்ல. ஒரு தேசம் மக்களுக்கான தேசமாய் இயங்கினால் நல்லவைகளை எதிர்ப்பார்க்கலாம்.
 
முதலாளிகளுக்காய் ஒரு தேசம் இயக்கப்படுகிறபோது என்ன எதிர்ப்பார்த்திட முடியும். சர்வதேசங்களுங்காய் ஒரு தேசம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. நாசமாகிகொண்டிருக்கும் தேசத்தின் முதலாளிகளுக்காய் மக்கள்ளும் மக்கள் பணங்களும் பலி கொடுக்கப்படுகிறது.
 
இந்த லட்சணத்தில் பக்கத்து தேசம் நல்ல தேசமென சொன்னால், இறையான்மை கெட்டது, இந்தியா செத்தது என்று வழக்கு பாய்ச்சுகிறார்கள். மக்களை முதலாளிகளுக்கு இறையாக்குவது தான் இறையாண்மையோ..?
 
எங்கள் நாடு தமிழ்நாடு. எங்கள் பக்கத்து நாடு தான் இந்தியா என்று  சொல்லவைத்து விடுவார்கள் போல. யாமறியும் பராபரமே..!
 
உலகிலயே இளைஞர்கள், இளைஞிகள் நிறைந்த இளம் தேசம் என உலகமே பொறாமைப்படும் ஒரு நாட்டில் ரெண்டே ரெண்டு பதக்கம் வாங்கி வருகிறோமே என வெட்கப்படாத அரசு மக்களுக்காக வேகமெடுத்திடுமா என்ன?
 
கோட்டுக்கும், மாட்டுக்கும் செலவழிக்கும் அரசியல்வாதிகள் மனிதர்களுக்காய் ஆட்சி புரிய விரும்புவார்களா என்ன? ம்..ஹும்... கனவிலும் நடக்காது. அப்படி நடந்தால் நீங்கள் கண்ட கணவு இந்தியாவிலிருக்காது. அப்போது நாட்டைவிட்டு வெளியேறியிருப்பீர்கள். நம்ம உலகநாயகனைப்போல.
 
ஜெபி.தென்பாதியான்