செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2016 (11:50 IST)

’கடிதம் போடுங்கள்’ - ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி எரிச்சல்

’கடிதம் போடுங்கள்’ - ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி எரிச்சல்

ஏதாவது கேள்விகள் இருந்தால் எனக்கு கடிதம் போடுங்கள் என்று என்று ஓய்வு குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி காட்டமாக பதிலளித்துள்ளார்.
 

 
டி 20 உலகக்கோப்பை போட்டி வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு தோனி தலைமையேற்று நடத்த உள்ளார். தோனியின் ஓய்வு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
 
எப்போதும் தனக்கே உரிய கிண்டல் பானியில் கேள்வியை எதிர்கொள்ளும் தோனி, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கேட்கப்பட்டப்போது காட்டமாக பதிலளித்தார்.
 
தோனி கூறுகையில், ”நான் 15 நாள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்னதாக என்ன பதில் சொன்னேனோ, அதில் எந்தவித மாற்றமும் இருக்காது. எங்கிருந்து இந்த கேள்வியை எழுப்பினாலும், பதில் ஒன்றாகத்தான் இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமெனில், உனது பெயர் என்ன? என்றால் தோனி என்று கூறுவேன்.
 
நீங்கள் புதிய வடிவிலான கேள்விகளை எழுப்பாத வரையிலும், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இதுதான் தொடர்ந்து நிகழும். கேள்விகள் இருந்தால், நீங்கள் எனக்கு கடிதம் எழுதுங்கள் அல்லது விண்ணப்பம் வையுங்கள்.
 
உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது என்பதற்காக, எந்த மாதிரியான கேள்வியையும் கேட்கலாம் என்பது சரியாக இருக்காது. செய்து முடிக்க என்ன இருக்கிறது, ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்தான மதிப்பீடுதான் மிக அவசியம்.
 
உங்களது கேள்வி கேட்பதற்கான ஒரு தளம் உள்ளது. அதற்காக ஒரே கேள்வியை தொடர்ந்து கேட்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இன்றைய காலகட்டத்தில் உலகத்தில் எங்கு என்ன நிகழ்ந்தாலும் அது ஊடகத்திற்குள் வந்துவிடுகிறது” என்று கூறியுள்ளார்.