தமிழ்நாடு பிரிமியர் லீக் : சேப்பாக்கம் அணியை வென்றது தூத்துக்குடி அணி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (16:01 IST)
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், சேப்பாக்கம் அணியை தூத்துக்குடி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடியை அணியும், ராஜகோபால் சதீஷ் தலைமையிலான சேப்பாக்கம் அணியும் மோதின.
 
இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக தினேஷ் கார்த்திக் 49 பந்துகளில் [3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 67 ரன்கள் எடுத்தார்.
 
உமாசங்கர் சுஷில் 25 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களும் எடுத்தனர். சேப்பாக்கம் அணி தரப்பில் ராஜகோபால் சதீஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பின்னர் களமிறங்கிய சேப்பாக்கம் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக தலைவன் சற்குணம் 29 ரன்களும், சத்தியமூர்த்தி சரவணன் 19 ரன்களும் எடுத்தனர்.
 
ஒருகட்டத்தில் 8.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் என்ற நிலையில் சேப்பாக்கம் அணி இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ தோல்வியை தழுவியது.
 
தூத்துக்குடி அணி தரப்பில் ஆஷிக் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆகாஷ் சுர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அரைச்சதம் விளாசிய தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :