1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:19 IST)

பாக்., வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி 20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகம்?

பாக்., வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி 20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சந்தேகம்?

இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
 

 
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை, 6ஆவது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.
 
குரூப் ‘ஏ’ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும். குரூப் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் நேரடியாக இடம் பெற்றுள்ளன.
 
வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகளில் 2 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
 
இந்நிலையில், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நேரடி கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை.
 
இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையே, 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 2 டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் இத்தொடருக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியதால் நிறுத்தப்பட்டன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்தது.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது. ஆனால், இந்தியாவில் சென்று விளையாடுவது பற்றி பாகிஸ்தான் அரசுதான் முடிவெடுக்கும் என்று திடீரென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீடியா இயக்குனர் அம்ஜத் உசேன் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து நாளைக்குள் அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு அனுமதி அளித்தால் இந்தியா சென்று விளையாடுவோம்.
 
வீரர்களின் விசா பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் விளையாடுவது பற்றி இப்போது பிரச்சினை எழவில்லை. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
 
அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், பொல்லார்ட், வெய்ன் பிராவோ, சுனில் நரைன் போன்ற முன்னணி வீரர்கள் ஊதியப் பிரச்சனை காரணமாக சிக்கல் எழுத்துள்ளது.
 
வீரர்களுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் ஊதிய ஒப்பந்தத்தில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, வரும் 14ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தில் வீரர்கள் கையெழுத்து போட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கெடு விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அவ்வாறு வீரர்கள் கையெழுத்திடாத பட்சத்தில், முன்னால் உலகச் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் தர வீரர்களுடன் களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.