1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (18:05 IST)

’தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டிவரும்’ - பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

லோதா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தாவிட்டால், உச்சநீதிமன்றம் தன்னிச்சையாகவே நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது.
 
அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிமுத்கல் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல்போட்டிகளில் விளையாடு வதற்கு 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
நீதிபதி ஆர்.எம்.லோதா, அசோக் பான், ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழு இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும், பிசிசிஐ-யின் விதிகளை ஆராய்ந்து 159 பக்க பரிந்துரை ஒன்றையும் நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
இதனிடையே லோதாகுழுவின் இந்த பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பீகார் கிரிக்கெட் வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
 
வியாழனன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ’லோதா குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக 4 வாரத்துக்குள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
 
லோதா குழுவின் பரிந்துரைகள் நேர்மறையானவை. நீதித்துறையின் அறிவார்ந்த மற்றும் மதிக்கக்கூடிய உறுப்பினர்களிடமிருந்து இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
 
எனவே, இதை பிசிசிஐ அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உச்சநீதிமன்றம் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.