வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (16:32 IST)

டெஸ்ட் போட்டி தோல்வி: முதுகெலும்பு இல்லாதது போல் இந்திய வீரர்கள் ஆடி விட்டனர் - சுனில் கவாஸ்கர்

இந்த டெஸ்டில் முதுகெலும்பு இல்லாதது போல் இந்திய வீரர்கள் ஆடி விட்டனர் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 
மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி குறித்து விமர்சித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘இந்த டெஸ்டில் முதுகெலும்பு இல்லாதது போல் இந்திய வீரர்கள் ஆடி விட்டனர். மனஉறுதி அவர்களிடம் இல்லை. ரொம்ப சாதாரணமான பந்து வீச்சில் கூட விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடந்த சில இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்கள் தலையை தொங்கவிட்டபடி வந்த காட்சிகளை மட்டும் காண முடிந்தது. இது போன்ற நிலையில் அவர்கள் எப்படி போராடுவார்கள் என்று நினைக்க முடியும்’ என்றார்.
 
மற்றொரு முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறுகையில், ‘டாஸ் ஜெயித்ததும் பிட்சின் தன்மைக்கு ஏற்ப முதலில் பீல்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும் என்ற அறிவுரையை பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் வழங்கியிருக்க வேண்டும். இதை செய்ய தவறியதால் இந்திய அணி மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்திய வீரர்கள் கவனத்தோடு அல்லது போராட்ட குணத்தோடு விளையாடியது மாதிரி தெரியவில்லை’ எனறார்.
 
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், ‘அடுத்த இரு நாட்கள் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், இந்திய அணி ஆடிய விதத்தை பரிதாபரகமானது என்று மட்டுமே வர்ணிக்க முடியும். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருந்தது. வேகப்பந்து வீச்சில் பந்து ஸ்விங் ஆகவில்லை. சுழற்பந்து வீச்சில் பந்து சுழன்று திரும்ப வில்லை. இப்படிப்பட்ட நிலையிலும் கூட இந்திய வீரர்களால் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை’ என்றார்.