1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (12:17 IST)

இந்திய சுழலில் சிக்கி சின்னாபின்னமானது தென் ஆப்பிரிக்கா; 79 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வின்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 12 ரன்களிலும், முரளி விஜய் 40 ரன்களிலும், புஜாரா 21 ரன்களிலும், ரஹானே 13 ரன்களிலும், விராட் கோலி 22 ரன்களிலும், ரோஹித் சர்மா 2 ரன்களிலும் வெளியேற 6 விக்கெட்டுகளுக்கு 125 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
 
இதனையடுத்து விருத்திமான் சஹா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி அணியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது. இந்த இணை 7ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் குவித்தது.
 
ஜடேஜா 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விருத்திமான் சஹாவும் 32 ரன்களிலும், அஸ்வின் 15 ரன்களிலும், அமித் மிஸ்ரா 3 ரன்களிலும் வெளியேற 215 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில், சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சுழலில் சிக்கி சின்னாபின்னமான தென் ஆப்பிரிக்கா:

ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறும் டி வில்லியர்ஸ்
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டமுடிவில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் வான் ஷைல் டக் அவுட் ஆகி வெளியேறினார். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய இம்ரான் தாஹிரும் 4 ரன்களில் வெளியேறினார்.
 
டீன் எல்கர் 7 ரன்களிலும், ஹசிம் அம்லா ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் இருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

12 ரன்களுக்குள் 5 விக்கெட்:
 
தொடங்கிய முதல் ஓவரிலேயே டீன் எல்கர் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் வெளியேறினார். அடுத்து தனது இரண்டாவது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்திலேயே ஹசிம் அம்லா 1 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
 
அதற்கு அடுத்த ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரில் டி வில்லியர்ஸ் 11 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், தென் ஆப்பிரிக்கா 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஃபாப் டு பிளஸ்ஸி 10 ரன்களிலும், விலாஸ் 1 ரன்னிலும், ஹார்மர் 13 ரன்களிலும் எடுத்து அடுத்தடுத்த் வெளியேறினர். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகப்பட்சமாக 35 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக மோர்னே மோர்கல் 1 ரன்னில் வெளியேற தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
 
இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மொத்தமுள்ள 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.