வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (16:31 IST)

400 விக்கெட்டுகளை கைப்பற்றி ஸ்டெய்ன் சாதனை

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
அதன் படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர்களாக தமின் இக்பாலும், இம்ருல் கயேஸும் களமிறங்கினர். தமிம் இக்பால், 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஹசிம் அம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
பின்னர், மொமினுல் ஹக் 40 ரன்களிலும், இம்ருல் கயேஸ் 30 ரன்களிலும் வெளியேறினர். தற்போது வரை 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்மதுல்லா 22 ரன்கள் மற்றும் முஷ்பிஹுர் ரஹிம் 31 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்.
 
டேல் ஸ்டெய்னின் சாதனைகள்:
 
* தமிம் இக்பாலின் விக்கெட் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெய்னுக்கு 400ஆவது விக்கெட் ஆகும். தமிம் இக்பாலின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், வேகப்பந்து வீச்சாளர்களில், குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
 
* உலகளவில் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தை இலங்கையின் முத்தையா முரளிதரன் [72 போட்டிகள்], நியூசிலாந்தின் ஹாட்லி [80 போட்டிகள்], அதற்கு அடுத்த இடத்தை டேல் ஸ்டெய்ன் [80 போட்டிகள்] பிடித்துள்ளார்.
 
* தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர்களில் 400 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய 2ஆவது வீரர் டேல் ஸ்டெய்ன் ஆவார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா வீரர் ஷான் பொல்லாக் 421 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
* 400 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் சிறந்த சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் ஸ்டெய்ன்  [22.58] 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ட்லி அம்புரோஸ் [20.99] முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் [21.64] 2ஆவது இடத்திலும், நியூசிலாந்தின் ஹாட்லி [22.29] 3ஆவது இடத்திலும் உள்ளனர்.