வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (17:12 IST)

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: பிசிசிஐ முடிவுக்கு கங்குலி ஆதரவு!

எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன், கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்ற பிசிசிஐ-யின் நிலைப்பாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

 
இந்திய ராணுவ சீருடையில் பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் உட்பட 8 பேர் பலி ஆனார்கள். போலீசாருடன் நடந்த 10 மணி நேர துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் போல மவுனமாகவே உள்ளது.
 
2023 ஆம் ஆண்டுவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே 5 கிரிக்கெட் தொடரை நடத்த இருதரப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தது. இவ்விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீண்டும் கிரிக்கெட் வாரியத்தை பின்வாங்க செய்துள்ளது.
 
இச்சம்பவமானது கிரிக்கெட் போட்டியை மீண்டும் பின்தங்க செய்துள்ளது. கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கிரிக்கெட் போட்டியை சிறிது காலம் கழித்து நடத்தலாம் என்று அறிவித்துவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை விட தேச பாதுகாப்பே முக்கியம் என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது.
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். “விளையாட்டு நடைபெற வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக தீவிரவாதம் முழுவதும் வெளியேற வேண்டும் என்ற பிசிசிஐ கூறியது சரியானது என்றே நான் நினைக்கின்றேன்.” என்று கங்குலி கூறியுள்ளார். “இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு இதுவே எப்போதும் காரணமாக உள்ளது. இது மிகவும் பொழுதுபோக்கான மற்றும் உயர்மட்ட தொடர் என்று நாங்கள் அறிந்திருந்தாலும், எல்லை முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக குர்தாஸ்பூர் சம்பவத்தை அடுத்து நாங்கள் போட்டியை நடத்த முடியாது.” என்று கங்குலி தெரிவித்துள்ளார்.