1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (21:51 IST)

இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்தியா

கொழும்பில் நடைபெறும் இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி பி.சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.
 

 
பின்னர் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 2வது ஓவரின் முதல் பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் கருணாரத்னே எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.
 
அடுத்து சங்ககாரா களம் இறங்கினார். ஆட்டத்தின் 9வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் சில்வா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆவுட் ஆனார். ஆனால், நடுவர் ரீபிளே செய்து பார்த்ததில் பின்னி நோ பால் வீசியது தெரிய வந்தது. இதனால் சில்வா 14 ரன்னில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார்.
 
அஸ்வின் வீசிய 14வது ஓவரில் சங்ககாராவிற்கு ஸ்லிப் பகுதியில் நின்ற ரகானே கடினமாக கேட்ச் ஒன்றை விட்டார்.
 
அதன்பின் இந்தியாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 75 ரன்னாக இருக்கும்போது சங்ககாரா அவுட் அனார். அவர் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து சில்வாவுடன் திரிமானே ஜோடி சேர்ந்தார். 14 ரன்னில் இருந்து தப்பிய சில்வா தனது 9வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் மேலும் ஒரு ரன் எடுத்து, 51 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
 
4வது விக்கெட்டுக்கு திரிமானேவுடன் கேப்டன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. 
 
இதனால் இலங்கை அணி 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 19 ரன்னுடனும், திரிமானே 28 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.
 
இந்தியா தற்போது 253 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3வது நாளான நாளை காலை நேர விளையாட்டு இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதிய உணவு இடைவேளைக்குள் இலங்கையின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியா இந்த டெஸ்டில் முன்னிலை வகிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
 
இன்று யாதவ், அஸ்வின், மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.