வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 8 டிசம்பர் 2014 (12:16 IST)

கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன் - ஷேவாக்

கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
 
வருகின்ற 2015ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இந்தியாவின் அதிரடி வீரர் ஷேவாக் சேர்க்கப்படவில்லை. சேவாக் மட்டுமின்றி கவுதம் கம்பிர், ஜாகிர்கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில மூத்த வீரர்களும் இடம்பெறவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ”ஒரு கிரிக்கெட் வீரராக, தங்கள் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். நானும் இதில் விதிவிலக்கல்ல.
 
இந்திய அணியில் இடம் பெற்று அந்த கனவு நிறைவேறிய போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது சக வீரர் ஒருவர், ‘இந்திய அணிக்காக விளையாடுவது எளிது. ஆனால் 10, 15 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பது தான் கடினம்’ என்றார்.
 
அதன் பிறகு எனது கனவை மாற்றிக் கொண்ட நான் இந்திய அணிக்காக 100 டெஸ்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயித்தேன். அந்த இலக்கையும் அடைந்து விட்டேன். இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை. எனவே இப்போது எல்லாவற்றையும் ரசித்து, அனுபவித்து விளையாடுகிறேன் அவ்வளவு தான்.
மேலும் அடுத்தப் பக்கம்...

கிரிக்கெட் வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனை இலக்கை நினைத்து கவலைப்படுகிறார்கள். ஆனால் நான் தனிப்பட்ட சாதனையை நோக்கி ஆடியதில்லை. இந்திய அணிக்காக 100 டெஸ்டுகளில் விளையாடி இருக்கிறேன். இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். அது தான் எனது விருப்பமும்.
 
டெஸ்டில் நான் 10 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுகிறேன் என்றால் அதனால் மகிழ்ச்சி அடையப் போவது யார்? நான் மட்டும் தானே. ஏனெனில் 8 ஆயிரம் ரன்கள், அல்லது 10 ஆயிரம் ரன்கள், அல்லது 15 ஆயிரம் ரன்களை எல்லாம் மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இவை அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் சாதனைகளாகத்தான் இருக்கும்.
 

 
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நான் கவலைப்படமாட்டேன்.
 
ஆனால் நான் எனது இரு மகன்களிடம் வேறு விதமாக போராட வேண்டி இருக்கிறது. ‘அப்பா... நீங்கள் விளையாடவில்லை. அதனால் இந்திய அணி ஜெயிக்காது’ என்று சில நேரம் சொல்கிறார்கள். அதற்கு நான் ‘நமது நாடு முதலில் வெற்றி பெற வேண்டும். அது தான் எப்போதும் முக்கியமே தவிர, அதில் யார் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமல்ல’ என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினேன்.
 
ஓய்வறையில் சக வீரர்களுடன் பழகும் வாய்ப்பை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை அளித்து, அணியை வெற்றி பெற வைக்கும் போது அது தான் எனக்கு மகிழ்ச்சியை தரும்” என்று கூறியுள்ளார்.