1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (17:51 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் சச்சின் டெண்டுல்கர்?

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த உலகக்கோப்பை வரையில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் டங்கன் பிளட்சர். இவருடைய பணி ஒப்பந்தம் நிறைவுபெறுவதை ஒட்டி, பிசிசிஐ அடுத்தப் பயிற்சியாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசணை நடத்தப்பட்டது. அப்போது இந்தியர் ஒருவரை பயிற்சியாலராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
சச்சின் டெண்டுல்கர்
ஏற்கனவே பிசிசிஐ முன்னாள் சேர்மன் என்.சீனிவாசன் மற்றும் அனியின் இயக்குநர் ரவி சாஸ்திரி ஆகியோர் சச்சின் பெயரை பரிசீலித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து பிசிசிஐயின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சச்சின் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும், இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இது குறித்து தற்போதைய பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில், “நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நானும், பிசிசிஐ செயலாளரும் சச்சினின் பெயரை செயற்குழு முன்பு வைத்தோம். தற்போது அதற்கு செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.
 
மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர்
மேலும், பிளட்சருக்கு என்னென்ன நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதோ, அதே நிபந்தனைகளுடன்தான் சச்சினும் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.
 
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில், “சச்சினின் பயிற்சியளிக்கும் விதம், அவருடன் விளையாடிய நாட்களில் இருந்ததுபோல் நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “கடின உழைப்பு, ஒழுக்கம், மிகுந்த தொழில் பக்தியுடன் செயல்படுவது ஆகியவற்றை முடிந்த அளவிற்கு திறமையுடன் வெளிப்படுத்தினார். நிச்சயம் அவர் பயிற்சியாளராக செயல்படும்போது திரும்ப அந்த விஷயங்களை மீண்டும் கொண்டு வருவார்” என்றார்.

இந்த தகவலையெல்லாம் தெரிவித்துள்ள தனியார் செய்தி நிறுவனம், இறுதியில் ’நாங்கள் இன்று முட்டாள் தினம் என்பதை தெரிவிக்க வேண்டியது எங்களது கடமையாக கருதுகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.