1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2015 (11:45 IST)

”சச்சின் நியாயமாக நடந்துகொள்ளவில்லை” - கபில் தேவ் குற்றச்சாட்டு

சச்சின் டெண்டுல்கர் தனது திறமைக்கேற்ப நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று முன்னாள் இந்திய அணி தலைவர் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
துபாயில் இருந்து வெளியாகும், கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளது.
 
அதில், "என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர் தனது திறமைக்கேற்ப நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அவர் இப்போது செய்திருப்பதை காட்டிலும், இன்னும் அதிகமாக சாதித்திருக்க முடியும் என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன். 
 
அவர் மும்பை கிரிக்கெட்டிலேயே தேக்கமடைந்து விட்டார். அவர் இரக்கமற்ற சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் தன்னை பொருத்தி பார்த்துக்கொள்ளவில்லை. அவர் வெறும் நேராகவும், சுத்தமாகவும் ஆடும் மும்பை வீரர்களுடன் அவர் செலவிட்டதை விட, விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் நிறைய நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 
 
சதங்கள் விளாசுவது எப்படி என்பதை அறிந்துள்ள கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர்தான். அதனை இரட்டைச் சதமாக, முச்சதமாக, ஏன் 400 ரன்களாக அவரால் மாற்ற முடியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும், சேவாக் போன்று சச்சினையும் விளையாடுமாறு கூறியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து கபில் தேவ், ”சச்சின் இதற்கு முழு தகுதியானவர். நுட்பமாக விளையாடுவதில் அவர் வலிமையானவர், ஆனால் அதனை சதமாக்குவதிலேயே குறியாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். ரிச்சர்ட்ஸ் போல் அல்லாமல் சச்சின் இரக்கமற்றவராக இல்லை.
 
அவர் முழுநிறைவான ஆட்டக்காரர். அதுவில்லாமல் மிகச்சரியான கிரிக்கெட் வீரராக இருந்தார். நான் அவருடன் நிறைய நேரம் செலவிட்டு இருந்தால், அவரிடம் கூறியிருப்பேன், ‘உங்களை நீங்களே அனுபவித்து விளையாடுங்கள், சேவாக்கை போல’ என்று கூறியிருப்பேன்” என்றார்.