1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2014 (21:20 IST)

ரோகித் சர்மா 264, இலங்கை அணி 251, இந்தியா அபார வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தனியொருவராக 264 எடுத்த நிலையில், இலங்கையின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்ந்து 251 ரன்களே எடுத்தனர். 

 
முன்னதாக, பூவா, தலையாவில் வென்ற இந்திய அணி, முதலில் மட்டை பிடித்து ஆடியது. அணித் தலைவர் விராத் கோஹ்லியும் ரோகித் சர்மாவும் இணைந்து, இந்தியாவின் ரன் விகிதத்தை அதிரடியாக உயர்த்தினர். துரதிருஷ்டவசமாக, கோஹ்லி ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ரோகித் சர்மா தனியாளாக நின்று பட்டையைக் கிளப்பினார்.
 
முதலில் மெதுவாக ஆடத் தொடங்கிய ரோகித், ஒரு கட்டத்தில் அதிரடியாக விளாசத் தொடங்கினார். இலங்கை பந்து வீச்சாளர்கள் அனைவரின் பந்துகளையும் பாரபட்சம் இல்லாமல் அவர் அடித்து ஆடினார். 173 பந்துகளை மட்டுமே சந்தித்து, 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்களைக் குவித்தார். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 404 ரன்கள் குவித்தது.
 
405 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இலங்கை அணி, 43.1 ஓவர்களில் 251 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் மேத்யூஸ் 75 ரன்களும் திரிமன்னே 59 ரன்களும் தில்ஷான் 34 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில் குல்கர்னி 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இறுதியில் 153 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.