செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (18:30 IST)

என்ன செய்தார் ரவி சாஸ்திரி? - கம்பிர் சராமாரி கேள்வி

ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட்டிற்காக என்ன செய்தார்? அவர் தனது விரக்தியையே காட்டுகிறார் என்று இந்திய அணி வீரர் கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தையே கிளப்பி வருகிறது. கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் மேலாளராக ரவி சாஸ்திரி பணிபுரிந்தார்.
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி கூறும்போது, தான் நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்ததாகவும், அக்காலகட்டத்தில் கிரிக்கெட் பிரகாசித்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஸ்கைப் மூலம் லஷ்மண், சஞ்சய் ஜக்தாலே, சச்சின் ஆகியோர் என்னிடம் அருமையான கேள்விகளைக் கேட்டனர் என்றும் சவுரவ் கங்குலி எனது நேர்காணலின் போது இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இதற்கு பதிலளித்திருந்த சவுரவ் கங்குலிம் ‘தலைமைப் பயிற்சியாளராக அவர் தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் என்று அவர் நினைத்தார் என்றால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் நான் கூற வேண்டியுள்ளது’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர், ”கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில், இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளிலும், டி 20 போட்டிகளிலும் முதலிடத்தை அடைய வைத்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 
ஆனால், நான் அவரிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், இந்திய அணி எதில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு வெளியே எந்த தொடரிலும் வெற்றிபெறவில்லை. சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்கா அணியிடம் தொடரை இழந்தது.
 
வங்கதேசத்தில் அந்த அணியிடம் தோல்வி கண்டது. எனவே, சாஸ்திரி வெறுமனே தன்னை முன்னிறுத்துவதன் மூலம், உண்மையிலேயே இந்திய அணியை முன்னேற்ற நினைப்பதை தடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது அவரது விரக்தியை காட்டுவதாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.