1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (01:04 IST)

ரெய்னா அதிரடி சதம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

பெங்களூரில் அக்.4 சனிக்கிழமை அன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்  போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, கோப்பையை 2ஆவது முறையாக வென்றது. அத்துடன் டி20 ஆட்டங்களில் அடுத்தடுத்துத் தொடர்ந்து 14 முறைகள் வென்று வந்த கொல்கத்தாவின் வெற்றிப் பயணத்தை முறியடித்து, வாகை சூடியது.
 
10 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும், மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 65 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 
 
அக்.4 அன்று நடந்த இறுதிப் போட்டியில், பூவா-தலையாவில் வென்ற சென்னை அணித் தலைவர் தோனி, பந்துவீசத் தீர்மானித்தார். முதலில் மட்டை பிடித்த கொல்கத்தா, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. அந்த அணித் தலைவர் கம்பீர், 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் உத்தப்பா 39 ரன்களும் பாண்டே 32 ரன்களும் எடுத்தனர். 
 
சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய பவன் நேகி, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுவும் ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் அவர் கொல்கத்தாவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தினார்.
 
அடுத்து மட்டை பிடித்த சென்னை அணி, அதிரடியாய் விளையாடியது. சுரேஷ் ரெய்னா 62 பந்துகளில் 109 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். இவர், 59 பந்துகளில் சதம் கண்டது குறிப்பிடத்தக்கது.
 
மெக்கல்லம், 30 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க, அணித் தலைவர் தோனி 14 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க, சென்னை அணி, 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 
 
தடை காரணமாக, கொல்கத்தாவின்  சுனில் நரைன் இந்தப் போட்டியில் விளையாடாதது, அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாய் அமைந்தது.
 
சாம்பியன் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு ரூ.15 கோடியும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கொல்கத்தா  அணிக்கு ரூ.8 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.
 
ஆட்ட நாயகனாகப் பவன் நேகியும் சிக்ஸர் மேல் சிக்ஸராக அடித்து, எதிரணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்த சுரேஷ் ரெய்னா, தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.