வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (09:33 IST)

1009 ரன்கள், 129 பவுண்டரிகள், 59 சிக்ஸர்கள் - பள்ளி மாணவன் உலக சாதனை

1009 ரன்கள், 129 பவுண்டரிகள், 59 சிக்ஸர்கள் - பள்ளி மாணவன் உலக சாதனை

பள்ளி அளவிலான 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், மும்பை வீரர் பிரனவ் தனவடே 323 பந்துகளில் [129 பவுண்டரிகள், 59 சிக்ஸர்கள்] 1009 ரன்கள் எடுத்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
 

 
மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான ஹெச்.டி. பண்டாரி கோப்பை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், கே.சி. காந்தி மேல்நிலைப் பள்ளியும், ஆர்யா குருகுல் பள்ளியும் மோதின.
 
இந்த போட்டியில் கே.சி. காந்தி சார்பில் கள்மிறங்கிய தொடக்க வீரர் பிரனவ் தனவடே ஆர்யா குருகுல் பள்ளியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கித் தள்ளியுள்ளார். இதன் மூலம், கே.சி.காந்தி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 1465 ரன்கள் குவித்தது.
 
பிரனவ், தனது அசாத்திய ஆட்டத்தால், 323 பந்துகளில் [129 பவுண்டரிகள், 59 சிக்ஸர்கள்] 1009 ரன்கள் எடுத்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதுவே, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் ஒருவர் எடுத்த அதிகப்பட்ச ரன்கள் ஆகும்.
 
இதற்கு முன்னர், கடந்த இங்கிலாந்து சேர்ந்தை ஆர்தர் எட்வர்ட் ஜூனே கால்லின்ஸ் என்ற கிரிக்கெட் வீரர் 1899ஆம் அண்டு 652 குவித்ததே தனிநபர் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இதன் மூலம் 116 ஆண்டுகால சாதனை முடிவிற்கு வந்துள்ளது.
 
அதேபோல, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி அளவிலானப் போட்டியில் மும்பையை சேர்ந்த பிரித்திவ் ஷா 330 பந்துகளில், [85 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] எடுத்ததே இதற்கு முன்னர் இந்திய வீரர் ஒருவரின் அதிகப்பட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
 
அபினவ் 1000 ரன்கள் குவித்ததும், நேரில் கண்ட அவரது தந்தை பிரசாந்த் தனவடே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “உண்மையிலேயே நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். அவன் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்த சாதனையை முறியடிக்க முடியாதது என்று நினைக்கிறேன்.
 
ஆனால், அவனது பயணம் எளிதானதல்ல. அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. கல்யானில் [மும்பையின் ஒரு பகுதி] ஒரு மைதானம்கூட கிடையாது. கிரிக்கெட் அங்கு வளர்ச்சி அடையவும் இல்லை.
 
அவனுக்கு ஸ்பான்சர்கள் யாரும் இல்லை. இனிமேல் கல்யான் முக்கியத்துவம் அடைந்துவிடும். அவனது பிரச்சனைகள் கலையப்படும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார். பிரனவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.