1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (09:37 IST)

எங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுங்கள் ; பாக். கேப்டன் வேண்டுகோள்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கோப்பை வாங்கி விட்டோம். இனியாவது. எங்கள்  நாட்டிற்கு வந்து விளையாடுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


 

 
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 338 ரன்கள் குவித்தது. ஃபேக்கர் ஜமான் 114 ரன்களும் அசார் அளி 59 ரன்களும் அடித்தனர்.
 
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் சர்மா அவுட் ஆனார். பின்னர் 3வது ஓவரில் கேப்டன் கோஹ்லி, 9வது ஓவரில் தவான், 13வது ஓவரில் யுவராஜ்சிங், 14வது ஓவரில் தோனி என ஐந்து முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். ஓரளவு அடித்து ஆடி வந்த பாண்டியாவை ஜடேஜா ரன் அவுட் ஆக்கியதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.
 
இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஷிப் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது “ இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. உடனே மறந்து விடும் வெற்ற அல்ல இது. பல நாட்களாக துபாயை சொந்த மைதானனமாக கருதி விளையாடி வருகிறோம். தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.  இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.