வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (12:48 IST)

இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர்கூட இல்லாத உலகக்கோப்பை அணி - ஐசிசி அறிவிப்பு

ஐசிசி சிறந்த உலகக்கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களில் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
 
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா மார்ச் 29ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
 

 
இந்நிலையில், ஐசிசி பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களில் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பதுதான் சோகம்.
 
மேலும் இதில் 5 வீரர்கள் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள், 4 வீரர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். 2 வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள், ஒருவர் ஜிம்பாப்வேயை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த கிறிஸ் கெய்ல், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்த உமேஷ் யாதவ் [18 விக்கெட்] பாகிஸ்தானை சேர்ந்த வஹாப் ரியாஸ் உள்ளிட்ட வீரர்கள் இதில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இது குறித்து ஐசிசி பொது மேலாளர் ஜெஃப் அல்லர்டைஸ் கூறும் போது, “ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களில் சாதனைகளை வைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே 12 பேர் கொண்ட அணியை அணியை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
 
ஏணெனில், இந்த தொடரில் 2 இரட்டைச் சதங்கள், 38 சதங்கள், 2 ஹேட்ரிக் விக்கெட்டுகள், 28 முறை 4 விக்கெட்டுகள் என்று வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். சாத்தியமான வகையில் பல வீரர்களின் பெயரும் பரிசீலிக்கப்பட்டன.
 
உதாரணமாக மஹமுதுல்லா [வங்கதேசம்], ஷைமன் அன்வர் [யு.ஏ.இ.], உமேஷ் யாதவ் [இந்தியா], ஷமி [இந்தியா], வஹாப் ரியாஸ் [பாகிஸ்தான்], சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிர் [தென் ஆப்பிரிக்கா], அஸ்வின் [இந்தியா] ஆகியோர்  வீரர்களும் பரிசீலிக்கப்பட்டனர்.
 
இந்த தொடரில் பல வீரர்கள் அற்புதமான தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி இருந்தபோதும், இந்த அனியில் இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை. ஆனால் இந்த அணிதான் நல்ல சமநிலையான அணியாக அமைந்துள்ளது” என்றார்.
 
அணி வீரர்கள் பின்வருமாறு:
 
பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், ஏ.பி. டி வில்லியர்ஸ், மார்டின் கப்தில், கிளென் மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன், டேனியல் வெட்டோரி, மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மோர்னே மோர்கல், பிரெண்டன் டெய்லர் (12-வது வீரர்).