வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (16:31 IST)

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதன் முதலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

உலகக்கோப்பை போட்டி அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி முதன் முதலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் பார்க்கில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் டேனியல் வெட்டோரி மற்றும் ஏலியாட்
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா 14 பந்துகளை சந்தித்த நிலையில் 10 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் 14 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
 
பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸிஸ் மற்றும் ரோஸ்ஸோவ் இருவரும் இணைந்து அணியை வீழ்ச்சியிலிருந்து தடுத்தனர். இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ரோஸ்ஸோவ் 39 ரன்களில் வெளியேறினார்.
 

 
பின்னர் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கியதும் ஆட்டத்தில் அணல் பறந்தது. அவர் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். இதனால் அவர் 32 பந்துகளில் [7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] அரைச்சதத்தை கடந்தார். இந்நிலையில் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டதோடு, ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
 

 
பின்னர் டு பிளஸ்ஸிஸ் 82 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிக்கும் விரட்டி அதிரடியாக ஆடினார். 18 பந்துகளை மட்டுமே சந்தித்த டேவிட் மில்லர் 49 ரன்களில் அவுட்டானார்.
 
43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 65 ரன்களுடனும், டுமினி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (21) கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி இலக்கு 298ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார்கள். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் 22 பந்துகளில் [6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] அரைச்சதம் எடுத்து அசத்தினார். பின்னர் 59 ரன்களில் வெளியேறினார்.
 

 
மார்டின் கப்தில் 34 ரன்கள், ராஸ் டெய்லர் 30 ரன்கள் குவித்து வெளியேறினர். அடுத்து வந்த வில்லியம்சனும் 6 ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இதன் பிறகு இணைந்த ஏலியாட் மற்றும் கோரி ஆண்டர்சன் இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் குவித்தனர்.
 
பிறகு ஆண்டர்சன் 57 பந்துகளில் [6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 58 ரன்கள் எடுத்தார். இந்த இணை 5 ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த ரோஞ்சி 7 ரன்களில் வெளியேறினார். பின்னர் டேனியல் வெட்டோரி களமிறங்கினார்.
 
வெற்றி தேடித்தந்த ஏலியாட்
இதனால் இறுதிநேர ஆட்டத்தில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை டேல் ஸ்டெய்ன் வீசினார். முதல் பந்தை வெட்டோரி எதிர்கொள்ள 1 ரன் எடுக்கப்பட்டது. அடுத்தப்பந்தை ஏலியட் எதிர்கொண்டு 1 ரன் எடுத்தார்.
 
மேலும் 4 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 3ஆவது பந்தை எதிர்கொண்ட வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இந்நிலையில் 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஏலியாட் பந்தை சிக்ஸருக்கு அபாரமாக அடித்து வெற்றி இலக்கை எட்டினார். 
 
இதன் மூலம் இறுதி வாய்ப்பை பரிதாபமாக தென் ஆப்பிரிக்கா அணி இழந்தது. நியூசிலாந்து அணி முதன் முதலாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதனாத்திலேயே கண்ணீர்விட்டு அழுதனர். ஆட்ட நாயகன் விருதை 73 பந்துகளில் 84 ரன்கள் குவித்து வெற்றியை தேடித்தந்த ஏலியாட் பெற்றார்.