வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:29 IST)

பாட்டில்கள் எல்லாம் ரசிகர்கள் ஜாலிக்காக வீசினர் – தோனி விளக்கம்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
 

 

இந்திய அணி தோல்வி அடைய உள்ள கடைசி நேரமான ஆட்டத்தின் 11 வது ஓவரின்போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசியுள்னர். இதனால், சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

அப்பொழுது வீரர்கள் அனைவரும் மைதானத்தில் அமர்ந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால் ரசிகர்கள் பொறுமை இழந்து மீண்டும் பாட்டில்கள் வீசி ரகளையில் ஈடுபடவே 13 ஓவர்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது.  ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட  பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர்.

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து கேப்டன் தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

பாதுகாப்பு விஷயத்தில் பெரிய ஆபத்து எதுவும் வீரர்களுக்கு நிகழவில்லை. மைதானத்தில் இருந்த ஆர்வம் மிகந்த ரசிகர்கள் சிலர் ஆடுகளத்தில் பாட்டில்களை வீசியுள்ளார்கள். அதனால் பெவிலியன் திரும்பினால் நல்லது என நடுவர்கள் எண்ணினார்கள். ஓர் அணி சரியாக ஆடாதபோது ரசிகர்கள் இதுபோல சிலசமயம் நடந்துகொள்வது சகஜம் தான். முதல் பாட்டிலில்தான் கோபத்தை வெளிப்படுத்திருக்கும். மற்ற பாட்டில்கள் எல்லாம் ஜாலிக்காக வீசியதாகத்தான் இருக்கும். எனவே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விசாகப்பட்டினத்தில் ஒருமுறை நாங்கள் ஜெயித்தபோதும் ரசிகர்கள் பாட்டில்களை வீசினார்கள். முதல் பாட்டில் வீசுவதில் இருந்துதான் இது தொடங்கும். அதன்பிறகு வீசப்படுவது எல்லாமே ஜாலிக்காக ரசிகர்கள் வீசியுள்ளனர் “ என்று தெரிவித்தார்.