வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (03:40 IST)

லோதா கமிட்டி பரிந்துரைகளை ஆராய மார்க்கண்டேய கட்ஜூ தலைமையில் குழு

பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்த லோதா கமிட்டி பரிந்துரைகளை ஆராய மார்க்கண்டேய கட்ஜூ தலைமையில் ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
 

 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
 
இந்தப் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
அதில், "கிரிக்கெட் ஆட்டத்தில் ஊழலை ஒழிக்க, பந்தயம் கட்டுதலை சட்டப்பூர்வமாக்குவது நல்லது. வீரர்கள், அதிகாரிகள் சூதாட்டப் பந்தயத்தில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்பட வேண்டும்.
 
பிசிசிஐ செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதாலும், பொதுச்செயல்களில் அது ஈடுபடுவதாலும், அதன் செயல்பாடுகளை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பிசிசிஐ-யை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிசீலிக்கப்பட வேண்டும்.
 
பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியை 3 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது. பிசிசிஐக்கு ஒரு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அவர் பிசிசிஐயின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். வீரர்களுக்கான சங்கம் தொடங்கப்படவேண்டும்.
 
பிசிசிஐயின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் போன்றவர்களுக்கென சில விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும். 70 வயதுக்கு மிகாத இந்தியராக இருக்க வேண்டும்.
 
9 உறுப்பினர்கள் கொண்ட பிசிசிஐ-க்கு உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், இந்த 9 உறுப்பினர்களில் 5 பேர் வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட வேண்டும், 2 பேர் வீரர்கள் சங்க பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும். ஒரு பெண்ணும் இதில் இடம்பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
லோதா குழு பரிந்துரைத்த பரிந்துரைகளை ஏற்று, இந்த மாற்றங்களை பிசிசிஐ அமைப்பின் நிர்வாக குழு 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
 
இந்நிலையில் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பிசிசிஐயின் செயற்குழுவில் இன்று விவாதிக்கப்பட்டது.
 
அப்போது லோதா கமிட்டி பரிந்துரைகள் குறித்து ஆராய மார்க்கண்டேய கட்ஜூ தலைமையில் ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்ஜூ தலைமையிலான குழு லோதா கமிட்டி பரிந்துரைகள் குறித்து ஆராய்ந்த பின் அதை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.