வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (13:17 IST)

இந்தியா மீண்டும் படுதோல்வி: ஓவல் டெஸ்டும் கோவிந்தா!

லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி 148 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்து இருந்தது.

இதைத் தொடர்ந்து 3 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 486 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆட்டக்காரரான ஜோ ரூட் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்டூவர்ட் ப்ராட் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியை விட 338 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக பின்னி 25 ரன்களும், கோலி 20 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகர்களாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.