வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (23:31 IST)

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் அணியை வீழ்த்தி, பஞ்சாப் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொகாலியில் செப்.18 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,  ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், இந்தியாவில் செப், 17 இல் தொடங்கின. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.
 
பூவா, தலையாவில் வென்ற பஞ்சாப், முதலில் பந்து வீசியது. மட்டை பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ், நிதானமாக ரன் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பிர்ட், வெல்ஸ் ஆகியோர் 28 ரன்களும் பிளிஸ்ஸார்டு 27 ரன்களும் டுங்க் 26 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
 
அடுத்து ஆடிய பஞ்சாப்புக்கு அதிர்ச்சிகரமான தொடக்கம். முதல் பந்திலேயே சேவாக் டக் அவுட் ஆனார். அடுத்து மில்லரும் டக் அவுட் ஆக, அந்த அணி 23 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இடையில் சஹாவும் ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல், அதிரடியாக 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்க்க, ஆட்டம் சூடு பிடித்தது. 
 
5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த பெய்லியும் பெரேராவும் எதிரணியைத் திணறடித்தனர். பெரேரா 20 பந்துகளில் 35 ரன்களும் பெய்லி 27 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இவர்களின் கூட்டணியில் பஞ்சாப், 17.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
பெரேரா, ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.