1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (17:05 IST)

ஹெராத் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா - 106 ரன்களில் இலங்கை அபார வெற்றி

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்துள்ளது.
 

 
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வார்னே-முரளிதரன் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி பல்லகெலெ மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸின் 117 ரன்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக தனஞ்செயா டி சில்வா 24 ரன்களும், குசல் பெரேரா 20 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செச்ல் மார்ஷ் 31 ரன்களும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 30 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லக்‌ஷன் சண்டகன், ரங்கணா ஹெராத் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
86 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி அற்புதமாக ஆடியது. தனது அருமையான இன்னிங்ஸை ஆடிய குசல் மெண்டிஸ் 176 ரன்கள் [21 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] விளாசினார். மேலும் கேப்டன் சண்டிமால் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
 
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரசிகர்கள் ஆஸ்திரேலியா அணிதான் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் ஸ்மித் மட்டும் அதிகப்பட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.
 
ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகள் 139 ரன்கள் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி மேற்கொண்டு 25 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 161 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனால், ஆஸ்திரேலியா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அட்டகாசமாக பந்துவீசிய ஹெராத் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.