1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2014 (12:07 IST)

தோனியின் சொந்த மண்ணில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது மகிழ்ச்சி: கோலி

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 5 ஆவது ஒரு நாள் போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது மகிழ்ச்சியாகவுள்ளது என தற்காலிக கேப்டன் கோலி கூறியுள்ளார்.
 
இந்தியா வந்த இலங்கை அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டியில் பங்கேற்றது. இதில் நவ, 16 நேற்று ராஞ்சியில் நடந்த 5 ஆவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
 
இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. மேலும் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் 139 ரன்னும், திரிமானே 52 ரன்னும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 139 ரன்களும், ராயுடு 59 ரன்கள் எடுத்தனர்.
 
இந்தியா அணியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி கனியை ருசித்தது. முன்னதாக நடைபெற்ற 4 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால், தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றது.
 
இதுகுறித்து கோலி கூறுகையில், இந்திய அணியின் விக்கெட்டுகள் சற்று சரிந்தபோது மிகவும் கவலை அடைந்தேன். ஒருபக்கம் பேட்ஸ்மேன்கள் மீது கோபம் ஏற்பட்டு, எரிச்சல் அடைந்தேன். மேலும் அக்ஷர் பட்டேல் கவனமுடன் செயல்பட்டதால், என்னால் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடிந்தது. தோனியின் சொந்த ஊரில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி ஷாட்டை அடித்தது மகிழ்ச்சி அளித்தது என்று கூறினார்.