1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (22:27 IST)

கோலி தலைமையில் அபார பேட்டிங்! T20 உலகக் கோப்பை இறுதியில் இந்தியா!

டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மிக தொழில் முறையாக இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக, அதாவது 2007-ற்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது.
வெற்றி பெற தேவையான 173 ரன்களை இந்தியா 19.1 ஓவரில் 176/4 என்று எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டெய்ன் வீசிய 20வது ஓவர் முதல் பந்தை கோலி ஆவேசமாக மிட்விக்கெட்டில் ஒரே சாத்து சாத்த அதுவே வெற்றி ரன்னாக அமைந்தது.
 
ஆட்ட நாயகன் கோலி 44 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 72 நாட் அவுட்.

ஆட்டத்தின் 17வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அசட்டுத் தனமான முடிவை எடுத்தார். புதிய பேட்ஸ்மென் சுரேஷ் ரெய்னா அப்போதுதான் இறங்கியுள்ளார். டேல் ஸ்டெய்னிடம் கொடுப்பதற்கு பதிலாக வெய்ன் பார்னெலிடம் கொடுத்தார்.
அது ஒரு மோசமான ஓவராக மாறியது. 2வது பந்து லெக் திசையில் வீச ரெய்னா அதனை ஸ்கொயர் லெக்கில் அபார சிக்ஸ் அடித்தார். அடுத்து இரண்டு பவுண்டரி வந்தது. அதில் இரண்டு எட்ஜ் பவுண்டரிகள்.  அந்த ஓவரில் 17 ரன்கள் ஆக 17வது ஓவர் முடிவில் இந்தியா 150/3 என்று வெற்றி இலக்கிற்கு அருகில் வந்தது.
 
முதலில் இந்தியாவின் துவக்கத்தை குறிப்பிடவேண்டும். ரஹானே, ரோகித் மிக அபாரமாக துவங்கினர். முதல் 6 ஓவர்களில் 56 ரன்கள் எடுக்க்ப்பட்டது.

குறிப்பாக ரோகித் சர்மா டேல் ஸ்டெய்னை ஒதுங்கிக் கொண்டு பாயிண்டில் அடித்த சிக்ஸ் அதன் பிறகு ரஹானே வெய்ன் பார்னெல் பந்தை மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவரில் அடித்த ஃபிளாட் சிக்ஸ் மறக்க முடியாத ஷாட்களாகும்.
ஏற்கனவே ரோகித் அபாரமான 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். 13 பந்துகளில் அவர் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து ஹென்ட்ரிக்ஸ் பந்தை வானத்திற்கு அண்ட வெளியில் அடிக்க முயன்றார் போலும், ஆனால் டிவிலியர்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
 
பவர் பிளேயில் 6 ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் கோலி களமிறங்கினார். பவர் பிளே முடிந்ததால் பீல்ட் பரவலானது அடுத்த 5 ஓவர்களில் வெறும் 34 ரன்களே வந்தது. கோலி ஒன்று இரண்டு என்று எடுத்தார். அதுவும் ஒரு ஓவரில் ரிஸ்கே எடுக்காமல் இரண்டு இரண்டாக ஓடி 8 ரன்களை எடுத்தது அவரது தன்னம்பிக்கையை உறுதி செய்தது.

கோலி அவுட் ஆகும் நிலையிலும் இல்லை. போட்டியை தோற்கும் நிலையிலும் இல்லை. அவர் மிகவும் கூலாக இலக்கைத் துரத்தினார். முதன் முதலில் டுமினியை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்தே துவங்கினார். 
இம்ரான் தாஹிர் சில டைட்டான ஓவர்களை வீசினார். 9.3 ஓவர்களில் ஸ்கோர் 77 ரன்களாக இருந்த போது ரஹானேயும் பார்னெல் பந்தை ஏதோ ஆட முயன்று ஆன் திசையில் டிவிலியர்ஸின் 2வது கேட்சாக முடிந்தார். ரஹானே 30 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
 
யுவ்ராஜ் சிங் களமிறங்கி கொஞ்சம் தடவினார். ஸ்லிப்பிற்கு பின்னால் ஒரு பவுண்டரி அடித்தார் பிறகு முக்கியக்கட்டத்தில் டேல் ஸ்டெய்னை நேராக தூக்கி அடித்து ஒரு பவுண்டரி அடித்தார். கோலியும் அவரும் இணைந்து 6 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதில் யுவ்ராஜ் பங்களிப்பு 17 பந்துகளில் 18 ரன்களே. மீதியெல்லாம் கோலி.
 
12.3 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை எட்டியது. யுவ்ராஜ் சிங் அவுட் ஆகும்போது இந்தியா 16வது ஓவர் முடிவில் 133/3 என்று இருந்தது. அதன் பிறகுதான் டுபிளேசி ஸ்டெய்னை கொண்டு வருவதற்குப் பதிலாக பார்னெலைக் கொண்டு வந்து 17 ரன்கள் வந்தது அந்த ஓவரை டேல் ஸ்டெய்ன் வீசியிருந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை காரணம் வீரத் கோலி அவர் பதட்டப்படவேயில்லையே.

உண்மையாகச் சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்காதான் துவக்கத்திலிருந்தே பதட்டத்துடன் நெருக்கடியில் ஆடியது, இந்தியா கோலாகவே ஆடியது. 
கடைசியில் தோனி வின்னிங் ஷாட் அடிக்கும் வாய்ப்பிருந்தாலும் கோலிக்கு அதனை விட்டுக் கொடுத்தார். மீண்டும் ஒரு முறை கோலி துரத்தல் மன்னன் என்று நிரூபித்துள்ளார்.
 
முன்னதாக தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின் போது தோனி சில தவறுகளைச் செய்தார். வேகப்பந்து வீச்சை வைத்து துவங்கினார். அதனால் முதல் 5 ஓவர்களில் 44 ரன்கள் வந்தது. அடுத்த 5 ஓவர்கள் அஸ்வினால் கட்டுப்படுத்தப்பட்டு 22 ரன்களே வந்தது.
 
அஸ்வின் உண்மையில் அபாரமான பந்து வீச்சு, முதலில் ஆம்லாவுக்கு தலைகால் புரியாத பந்தை வீசி பவுல்டு எடுத்தார். பிறகு முக்கிய கட்டத்தில் டுபிளேசியையும் பவுல்டு செய்தார். அனைத்தையும் விட முக்கியமானது அபாய வீரர் டிவிலியர்ஸை நிறுத்தி வைத்து தூக்கினார். டிவிலியர்ஸ் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்கொயர் லெக்கை பின்னால் தள்ளி ஒரு ஷாட் பிட்ச் பந்தை வேகமாக வீசினார் டிவிலியர்ஸ் வார்க்கொண்டு ஆடிக்கப்போய் அதே இடத்தில் கேட்ச் கொடுத்தார்.
 
அஸ்வினின் பந்து வீச்சும் இன்றைய போட்டியில் மிக முக்கியம். கோலி 4 போட்டிகளில் 3வது அரை சதம் எடுத்தார்.
 
உண்மையில் கோலி துரத்தலை நன்றாக திட்டமிட்டு நெருக்கடிகள் இல்லாமல் பதட்டமில்லாமல் சேஸ் செய்தார்.
 
இந்தியா, இலங்கை இறுதிப்போட்டி ஞாயிறன்று நடைபெறுகிறது. 2011 உலகக்கோப்பை ரிபீட் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.