1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 26 மே 2014 (12:46 IST)

டெல்லியை சுருட்டியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை புரட்டியெடுத்து பஞ்சாப் அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. டெல்லி அணியில் முரளிவிஜய் நீக்கப்பட்டார். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
 
இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணி வழக்கம் போல் சொதப்பியது. கேப்டன் கெவின் பீட்டர்சனை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இந்த சீசனில் முதல் முறையாக அரைசதம் அடித்த கெவின் பீட்டர்சன் 58 ரன்களில் (41 பந்து, 9 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அவருடன் சேர்த்து தினேஷ் கார்த்திக் (13 ரன்), ஜேம்ஸ் நீஷம் (12 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர். மயங்க் அகர்வால் (2 ரன்) கேதர் ஜாதவ் (0) மனோஜ் திவாரி (8 ரன்), டுமினி (8 ரன்) உள்ளிட்ட எஞ்சிய அனைவரும் ஒற்றை இலக்கில் அடங்கி போனார்கள்.
 
டெல்லி அணி 18.1 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் கடைசி 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததும் கவனித்தக்க விஷயமாகும். பஞ்சாப் தரப்பில் பர்விந்தர் அவனா, அக்ஷார் பட்டேல், மிட்செல் ஜான்சன், கரன்வீர்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் ஷேவாக் (9 ரன்), 2-வது விக்கெட்டுக்கு வந்த மேக்ஸ்வெல் (0) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், மனன் வோராவும், டேவிட் மில்லரும் இணைந்து வெற்றியை சுலபமாக்கினர். இலக்கை நெருங்கிய சமயத்தில் மனன் வோரா 47 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார்.
 
பஞ்சாப் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டேவிட் மில்லர் 47 ரன்களுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ரன்னுடனும் களத்தில் நின்றனர். மனன் வோரா ஆட்டநாயகன் விருதை பெற்றார். 14-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 11-வது வெற்றியாகும். அதே சமயம் தனது கடைசி 9 ஆட்டங்களிலும் வரிசையாக மண்ணை கவ்விய டெல்லி அணிக்கு மொத்தத்தில் இது 12-வது தோல்வியாகும்.
 
வீழ்ச்சிக்கு பிறகு டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறும் போது, ‘பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் இவ்வளவு குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்திருக்கக்கூடாது. மோசமான ஆட்டத்திற்காக டெல்லி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில முன்னணி வீரர்களின் காயத்தால் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு புத்துணர்ச்சியுடன், சரியான பாதையில் பயணிக்க முயற்சிப்போம்’ என்றார்.