வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 5 ஜூலை 2014 (10:49 IST)

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்படுவார்கள் - ஜேம்ஸ் விடாஹெர்

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்படுவார்கள் என்று இங்கிலாந்து அணியின் தேர்வாளர் ஜேம்ஸ் விடாஹெர் தெரிவித்துள்ளார்.
 
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் பெயரை தேர்வாளர் விடாஹெர் வெளியிட்டார். அதில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியில் உள்ள 13 வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான் மற்றும் பிளாங்கெட் ஆகிய நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக விளையாடியுள்ளனர்.
 
இதனால் அவர்களின் பணிச்சுமை கண்காணிக்கப்பட வேண்டும் என்று பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் கூறினார். இந்த யோசனையை பிராட் ஆதரிக்கவில்லை.
 
ஆனால், இந்த 4 பேர் தவிர சில சமயங்களில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களமிறங்க வேண்டும் என்பதே தேர்வாளரின் எதிர்பார்ப்பு. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வோக்ஸ் இடம் பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் ஈடுபடவில்லை. ஆனால், பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுக்கள் கைப்பற்றி உள்ளார்.
 
“குறைந்த காலத்தில் 5 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். சில சமயத்தில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டியிருக்கும். எனவே, அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்ததற்கு இதுவும் ஒரு காரணம். போட்டி தொடங்கும்போது அவர்கள் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி ஆராய வேண்டும்” என்றும் தேர்வாளர் விடாஹெர் கூறினார்.