வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 16 பிப்ரவரி 2015 (12:26 IST)

அதிரடி ஆட்டக்காரர்களை அடக்கிய கத்துக்குட்டி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது அயர்லாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில், அயர்லாந்து அணி வீழ்த்தியது.
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 11ஆவது உலகக் கோப்பை போட்டியின் 5ஆவது லீக் ஆட்டம் நியூசிலாந்தின் நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதின.

 
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் டுவைன் ஸ்மித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் இருவரும் அதிக நேரம் நீடித்து நிற்கவில்லை. டுவைன் ஸ்மித் 18 ரன்களும், கெய்ல் 36 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
 
பின்னர் களமிறங்கிய சாமுவேல்ஸ் 21 ரன்னிலும், ராம்தின் ஒரு ரன்னிலும் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சிம்மன்ஸ், டேரன் சமி ஆகியோர் இணைந்து அயர்லாந்தின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
 
டேரன் சமி 67 பந்துகளில் ( 9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட) 89 ரன்கள்  அவுட் ஆனார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்த சிம்மன்ஸ் 84 பந்துகளில் ( 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட) 102 ரன்களில் ஆட்டமிழந்ததார்.
 
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட் வீழ்த்தினர். மூனே, சோரன்சென் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
 
பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடக்க ஜோடி 13.3 ஓவர்களில் 71 எடுத்திருந்தபோது போட்டர்ஃபீல்ட் 23 ரன்களில் வெளியேறினார்.

 
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்டிர்லிங், ஜோய்சி ஜோடி அற்புதமாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜோய்சி 84 ரன்கள் (10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து வெளியேறினார்.
 
இறுதிவரை களத்தில் நின்ற ஓ பிரையன் 60 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில், அயர்லாந்து அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.