செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 25 மே 2014 (11:20 IST)

ஐ.பி.எல். டி20: பெங்களூர் அணியை பழிதீர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழிதீர்த்துக் கொண்டது.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று மாலை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
மோசமான ஆட்டம் காரணமாக பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் தடாலடியாக கழற்றி விடப்பட்டார். முரளிதரன், அபுநெசிம், அசோக் திண்டா ஆகியோரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ரிலீ ரோஸ்சவ், ரவி ராம்பால், ஜகாதி, விஜய் ஜோல் சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் இரு மாற்றமாக பவான் நெஜி, ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு பத்ரீ, ஆஷிஷ் நெஹரா இடம் பிடித்தனர்.
 
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார். வழக்கமாக சிவப்பு நிற உடையுடன் விளையாடும் பெங்களூர் அணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் பசுமை விழிப்புணர்வுக்காக இளம் நிற பச்சை உடையுடன் களம் கண்டனர்.
 
பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணி நெஹராவின் முதல் ஓவரிலேயே ரிலீ ரோஸ்சவ்வின் (1 ரன்) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
 
அந்த அணியில் கேப்டன் விராட் கோலி தவிர மற்றவர்களின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. குறிப்பாக ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ்சிங் (24 பந்தில் 2 பவுண்டரியுடன் 25 ரன்), அதிரடி சூரர் டிவில்லியர்ஸ் (10 ரன்) ஆகியோர் நிலைத்து நிற்க தவறியதால் பெங்களூர் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது.
 
இதற்கு மத்தியில் அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு, உள்ளூர் ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த விராட் கோலி (73 ரன், 49 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி ஓவரில் கிளீன் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 155 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் இன்னிங்சை வெய்ன் சுமித்தும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடங்கினர். புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைப்பதற்கு ரன்-ரேட் அவசியம் என்பதை உணர்ந்து இருவரும் முதல் ஓவரில் இருந்தே பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டியடிக்கும் முனைப்புடன் நாலாபுறமும் பேட்டை விளாசினார். சில கண்டங்களில் இருந்து தப்பித்த இவர்கள் 4-வது ஓவரில் அணியை 50 ரன்களை கடக்க வைத்தனர். சென்னை அணியின் அதிவேக அரைசதம் இதுவாகும். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. சுமித் 34 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஆட வந்த ரெய்னா 18 ரன்களில் (18 பந்து, 2 பவுண்டரி) ஸ்டம்பிங் ஆனார்.
 
இதைத் தொடர்ந்து டு பிளிஸ்சிஸ்சும், கேப்டன் தோனியும் கைகோர்த்தனர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் அதன் பிறகு பெங்களூர் பந்து வீச்சை நொறுக்கினார்கள். முதல் 3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த யுவராஜ்சிங், தனது கடைசி ஓவரில் தோனியிடம் வசமாக வாங்கி கட்டிக் கொண்டார். அந்த ஓவரில் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தோனி விரட்டி அசத்தினார். இதனால் சென்னை அணி இலக்கை எளிதாக நெருங்கியது.
 
முடிவில் ஜகாதியின் சுழலில் டு பிளிஸ்சிஸ் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து, ஆட்டத்தை தித்திப்புடன் முடித்து வைத்தார். சென்னை அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி 49 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), டு பிளிஸ்சிஸ் 54 ரன்களுடனும் (43 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் கேப்டனாக அவர் வாங்கும் 11-வது ஆட்டநாயகன் விருது இதுவாகும். இதன் மூலம் கேப்டனாக அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற கவுதம் கம்பீரின் (இவரும் 11 முறை) சாதனையை அவர் சமன் செய்தார்.
 
தனது கடைசி லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 9-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்று விமர்சனத்திற்குள்ளான சென்னை அணி தோல்விப்பயணத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டது. அது மட்டுமின்றி ஏற்கனவே ராஞ்சியில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரிடம் தோற்றிருந்தது. அதற்கு அவர்களது சொந்த ஊரிலேயே சென்னை அணி பதிலடி கொடுத்து விட்டது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூர் அணி 9-வது தோல்வியுடன் நடையை கட்டியது.