வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2014 (19:23 IST)

ஐ.பி.எல். சூதாட்டம்: ஸ்ரீநிவாசன், மெய்யப்பன் மீது உச்ச நீதிமன்றம் குற்றச்சாட்டு

ஐ.பி.எல். சூதாட்டம் குறித்த முகுல் முத்கல் குழுவின் அறிக்கை விவரங்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஸ்ரீநிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுள்ளது.
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரிப்பதற்காக முகுல் முத்கல் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்த ஸ்ரீநிவாசன் தனது பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ளார்.
 
இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரணை செய்த முத்கல் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ஸ்ரீநிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா, சுந்தர் ராமன் மீது குற்றச்சாட்டுள்ளதாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட வீரர்களின் பெயரை வெளியிடவில்லை.
 
மேலும், முத்கல் குழுவின் அறிக்கை நகலை முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஸ்ரீநிவாசனுக்கும், பி.சி.சி.ஐ.க்கும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஐ.பி.எல். சூதாட்டம் குறித்த முத்கல் குழுவின் அறிக்கை குறித்து ஸ்ரீநிவாசன், பி.சி.சி.ஐ. ஆகியோர் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லாதோரும் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனவும், 4 நாட்களுக்குள் தங்களது ஆட்சேபத்தை பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.