வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2014 (11:37 IST)

மீண்டும் மேக்ஸ்வெல், மில்லர் அதிரடி! ராஜஸ்தானை ஊதியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல். கிரிக்கெட் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் 191/5 என்ற மிகப்பெரிய இலக்கை மீண்டும் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் ஆகியோர் கேலி செய்யும் விதமாக துரத்தி 193/3 என்று பஞ்சாப் அணிக்கு அபாரமான 7 விக்கெட் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
மெக்ஸ்வெல்லும், மில்லரும் இணைந்து 64 பந்துகளில் 140 ரன்களை விளாசித் தள்ளினர். 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். இதைவிட அடித்த ரிவர்ஸ் ஷாட்கள் உண்மையில் இவர்களுக்கு பந்து வீச முடியாது என்ற பயத்தை அனைத்து அணிகளுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் துரத்தலை மிகவும் மந்தமாக தொடங்கியது. ரித்திமான் சஹாவை முன்னால் அனுப்பியது எடுபடவில்லை. 17 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது பஞ்சாப்.

அதன் பிறகு நம்ப முடியாத ஷாட்கள்தான் ஆதிக்கம் செலுத்தியது. கேன் ரிச்சர்ட்சனிலிருந்து துவங்கினார் மேக்ஸ்வெல். பிறகு பிரவீண் டாம்பே பிறகு ஜேம்ஸ் பாக்னர். அதுவும் ஒரு ஷாட் ஸ்லோ பவுன்சராக இவரோ மேலேறி வந்து விட்டார். ஆனாலும் அப்படியும் கவலைப்படாமல் ஒரே அப்பட் கட் செய்ய அது சிக்சருக்குச் சென்றது பாக்னரால் உண்மையில் நம்ப முடியவில்லை.
டாம்பே, ரஜத் பாட்டியா சிறிது நேரம் அடிக்க விடாமல் வீசினர். தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 12 ரன்கள் வரை சென்றது. இந்த நிலையில் பாட்டியா 11வது ஒவரைத் தொடங்கினார். இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப், பிறகு கவர் திசைக்கு மேல் ஒரு இடது கை ஷாட். அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் ரன் விகிதத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பிறகு தவான் குல்கர்னி வந்தார் பலமான லெக்திசை பீல்டிங்.
 
ஆனால் மேக்ஸ்வெல் ஒரு அப்பட் கட், இரண்டு டிரைவ் கவர் திசையில், ஒரு பிளிக் என்று 16 ரன்களை அந்த ஓவரில் எடுத்தார் மேக்ஸ்வெல். அடுத்த பாட்டியா ஓவரில் மேலும் 2 சிச்கர்களை விளாசினார் மேக்ஸ்வெல்.

கேன் ரிச்சர்ட்சனிடம் 89 ரன்களில் ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல் ராஜஸ்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் பாக்னர் போனால் என்ன நான் இருக்கிறேன் என்று மில்லர் 19 பந்துகளில் 51 ரன்களை விளாசி எடுத்தார்.
6 ஓவர்களில் வெற்றிக்கு 66 ரன்கள் தேவை என்ற நிலையில் மில்லர் களமிறங்கினார். பிறகு ஸ்டூவர்ட் பின்னி ஒரு ஓவரை நன்றாக வீச கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் என்றானது இலக்கு. தாம்பேயும் ஒரு ஓவரில் 3 பந்துகளை டைட்டாக வீசினார். மில்லர் அடுத்த பந்தை லாங் ஆஃபில் சிக்ஸருக்குத் தூக்கினார். அடுத்த ஓவரில் 7 ரன்கள்  வர கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
 
ரிச்சர்ட்சன், பாக்னர் ஆக்யிஓருக்கு ஒவ்வொரு ஓவர் இருக்கும் நிலையில், த்வால் குல்கர்னியை தேர்ந்தெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன், பின்னியிடம் கூட கொடுத்திருக்கலாம். குல்கர்னியை மில்லர் சாத்தி எடுத்து விட்டார். குல்கர்னி என்னதான் நன்றாக வீசினாலும் மில்லரின் தீவிரத்திற்கு முன் ஒன்றும் முடியவில்லை. 4 சிக்சர்களை விளாசி ஆட்டத்தை ராஜஸ்தானுக்கு ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டார்.
 
முன்னதாக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் வாட்சன் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50ரன்கள் எடுக்க, இந்தியாவின் அடுத்த நட்சத்திரமாக கருதப்படும் சஞ்சு சாம்சன் 34 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசினார்.
 
கடைசியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாச ராஜஸ்தான் 191/5.
 
மேக்ஸ்வெல் 45 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்சர்கள் சகிதம் 89 ரன்கள் விளாசினார். மில்லர் 6 சிக்சர்களுடன் 51 நாட் அவுட். புஜாரா துவக்கத்தில் களமிறங்கி 40 நாட் அவுட்.
 
ஆட்ட நாயகன் மேக்ஸ்வெல். இன்று இரவு 8 மணி ஆட்டத்தில் சென்னை, டெல்லி அணிகள் மோதுகின்றன.